கொழும்பில் கடற்றொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தைத் தடுத்து நிறுத்துமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையைக் கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (10) அதிரடியாக நிராகரித்துள்ளார். “அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது என்பது மக்களின் அடிப்படை உரிமை” எனச் சுட்டிக்காட்டிய நீதியரசர், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறி போராட்டத்தைத் தடை செய்ய முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
டிராக்டர்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் (Winch Machines) பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை (Ma-dal) மீன்பிடித் தொழிலுக்குத் தற்போதைய அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி, முல்லைத்தீவு மற்றும் கொக்கிளாய் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 6 நாட்களாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தினால் பொதுமக்களுக்குப் பெரும் அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும், போக்குவரத்துப் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துக் கோட்டை பொலிஸார் போராட்டத்திற்குத் தடை கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவைப் பரிசீலித்த நீதவான் இசுரு நெத்திகுமார, பொலிஸாரின் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன், போராட்டக்காரர்கள் மோட்டார் வாகனச் சட்டம் அல்லது பொலிஸ் கட்டளைச் சட்டத்தை மீறிச் செயற்பட்டால் மாத்திரம், தமக்கு வழங்கப்பட்டுள்ள சட்டபூர்வ அதிகாரங்களைப் பயன்படுத்திப் பொலிஸார் நடவடிக்கை எடுக்கலாம் என அறிவுறுத்தினார். நீதியரசரின் இந்தத் தீர்ப்பு, உரிமைக்காகப் போராடும் கடற்றொழிலாளர்களுக்குப் பெரும் பலமாக அமைந்துள்ள அதேவேளை, ஜனநாயக நாட்டில் போராட்டங்களுக்கான சுதந்திரத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

