உள்ளகக் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையால் வங்கிவைப்புக்களிலோ, வட்டித்தொகையிலோ தாக்கம் ஏற்படாது.
உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயன்முறை உத்தி குறித்த தீர்மானங்கள் மற்றும் அறிவிப்புக்களை மேற்கொள்வதற்காகவே எதிர்வரும் 30 ஆம் திகதியை வங்கி விடுமுறை தினமாக அறிவித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பாரிஸிலிருந்து நாடு திரும்பிய அவர், எதிர்வரும் 30 ஆம் திகதி வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் இம்மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் ஜுலை மாதம் 3 ஆம் திகதிவரையான 5 நாட்கள் வங்கி விடுமுறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
‘மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சு ஆகியவற்றினால் கலந்துரையாடப்பட்டவாறு உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயன்முறை உத்திக்கு அவசியமான போதியளவு நாட்களை உருவாக்குவதே எதிர்வரும் 30 ஆம் திகதி வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டமைக்கான பிரதான காரணமாகும்’ என்று ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயன்முறையின் விளைவாக நாட்டின் வங்கிகளிலுள்ள வைப்புக்கள் மீதோ அல்லது அவற்றுக்கான வட்டித்தொகை மீதோ எவ்வித தாக்கமும் ஏற்படாது என்றும் அவர் உத்தரவாதமளித்துள்ளார்.
மேலும் உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயன்முறை உத்தி அறிவிக்கப்பட்டதன் பின்னர், அதுகுறித்து அமைச்சரவை மற்றும் பொதுநிதி பற்றிய குழு ஆகியவற்றிடமும் விவாதம் மற்றும் வாக்கெடுப்பின் ஊடாக பாராளுமன்றத்திடமும் அனுமதி பெறப்படவேண்டும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை இச்செயன்முறையின்போது வர்த்தக வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதிக்கட்டமைப்புக்களில் உள்ள பொதுமக்களின் வைப்புக்களிலும் அவற்றுக்கான வட்டியிலும் எவ்வித கழிப்பனவுகளும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவித்துள்ள ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ஜுன் 29 – ஜுலை 3 வரையான 5 நாட்கள் வங்கி விடுமுறையின்போது தன்னியக்க டெலர் இயந்திரம் (ஏ.ரி.எம்), இணையவழி வங்கி நடவடிக்கைகள் ஆகிய சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment