அம்பாறை மாவட்டம், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நகர மண்டப வீதியில், வீட்டில் வளர்க்கப்பட்ட பூனை ஒன்று அப்பகுதியில் உள்ள 5 பேரைக் கடித்த நிலையில் திடீரென இறந்த சம்பவம் அண்மையில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் வெறிநாய்க்கடி (Rabies) அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பூனை 5 பேரைக் கடித்த பின்னர் தலைமறைவாகி இருந்துள்ளது. நீண்ட தேடுதலுக்குப் பின்னர், அது இறந்த நிலையில் மீட்கப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக உடனடியாகச் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் குறித்த பூனையை மீட்டுப் பரிசோதனை மேற்கொண்டனர்.
வெறிநாய்க்கடி நோய்த்தொற்று அபாயம் உள்ளதா என்பதைக் கண்டறிய, மேலதிகப் பரிசோதனைக்காக அப்பூனையின் தலை வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அண்மையில், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட புறநகர்ப் பகுதியில் பல பேரைக் கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் பதிவாகியிருந்தது.
கடித்த நாயின் மாதிரி அறிக்கை, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) இனால் ‘Rabies positive’ என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அப் பிரதேசத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டல் மற்றும் வளர்ப்பு நாய்கள், கட்டாக்காலி நாய்களுக்கு ARV (Anti-Rabies Vaccine) தடுப்பூசி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கல்முனையில் இடம்பெற்ற இச்சம்பவம், மீண்டும் வெறிநாய்க்கடி நோய் குறித்த விழிப்புணர்வையும், தடுப்பு நடவடிக்கைகளையும் அவசியமாக்கியுள்ளது.