பெங்களூரு, கப்பன் பூங்கா பகுதியில் உள்ள பாலிவுட் நட்சத்திரங்களுக்குச் சொந்தமான கேளிக்கை விடுதிகள் (Pubs/Clubs), நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி இயங்கியதாகக் கூறி பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி திறப்பு விழாவின் போது, அவர் ஆபாச சைகை காட்டியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பொலிஸார் கண்காணிப்பு கேமராக்களை (CCTV) ஆய்வு செய்தனர்.
அந்த விடுதி அதிகாலை 1.25 மணி வரை செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது. காலக்கெடுவை மீறியதற்காகக் கப்பன் பூங்கா பொலிஸார் விடுதி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், நடிகை ஷில்பா ஷெட்டிக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் கடந்த வாரம் தொழிலதிபர் ஒருவரால் சர்ச்சை ஏற்பட்டது.
இவ்விவகாரம் குறித்துச் சோதனை செய்தபோது, அந்த விடுதியும் விதிமுறைகளை மீறி அதிகாலை 1.30 மணி வரை செயல்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாகவும் கப்பன் பூங்கா பொலிஸார் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெங்களூருவில் இரவு நேரக் கேளிக்கை விடுதிகளுக்கான நேரக்கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.