மட்டு. ஏறாவூர் வாவியில் மீனவரின் சடலம்!

DSC 9065

மட்டக்களப்பு, ஏறாவூர் – ஆறுமுகத்தான்குடியிருப்பு வாவியிலிருந்து மீனவர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளார் என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை மீட்கப்பட்ட இந்தச் சடலம் ஆறுமுகத்தான்குடியிருப்பு துரைச்சாமி வீதியை அண்டி வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை ஸ்ரீதரன் (வயது – 51) என்பவருடையது என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

வழமை போன்று தனியாகவே வாவியில் இரவு நேர மீன்பிடிக்குச் செல்லும் இவர் இரவுச் சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு நேற்று மாலை தோணியில் வாவிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.

எனினும், இன்று காலை அவரது சடலம் வாவியில் மிதப்பதைக் கண்டு சக மீனவர்கள் மீட்டு கரைக்குக் கொண்டு வந்து சேர்ப்பித்துள்ளனர்.

நேற்று மாலை வாவியில் பலத்த காற்று வீசியது எனத் தெரிவிக்கும் மீனவர்கள் அதன் காரணமாக தோணி கவிழ்ந்து மீனவர் வாவியில் வீழ்ந்து மூழ்கியிருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version