கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

MediaFile 11

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2025 நவம்பர் மாதம் 29-ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது, பரந்தன் இந்து மகா வித்தியாலய நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மக்களைப் பராமரித்துக் கொண்டிருந்த கிராம அலுவலர் மீது, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த 16-ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் போது இளங்குமரன் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. இதனால் இன்றைய தினம் அவரை முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகள் இருப்பதால், அதில் கலந்துகொள்வதற்காக இளங்குமரன் நேற்றைய தினமே (19) நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் (Motion) ஒன்றைத் தாக்கல் செய்து முன்னிலையாகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, அவரை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

பாதிக்கப்பட்ட கிராம அலுவலர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் முன்னிலையாகியிருந்தார். நீண்ட வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து, குறித்த வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8-ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

 

Exit mobile version