கட்சிகளிடம் ஆதரவு கேட்பது வெட்கக்கேடான செயல்!

20220812 115306

அரசாங்கமொன்று தற்போது அமைக்கப்பட்டிருக்கும்போது சர்வகட்சி அமைக்க ஏனைய கட்சிகளிடம் ஆதரவு கேட்பது வெட்கக்கேடான செயலாகுமென மக்கள் விடுதலை முன்ணணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரட்ணாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்ணணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிமல் ரட்ணாயக்க இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் விடுதலை முன்னணி இந்த சர்வகட்சி அரசில் பங்கேற்காது என ஏற்கனவே அறிவித்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளும் சர்வகட்சி அரசில் பங்கேற்கமாடடோம் என அறிவித்துள்ளன. அமைச்சுப் பதவிகளை எலும்புத்துண்டுகளாக போட்டு ஒரு சில அரசியல்வாதிகளை இழுக்கலாம்.

தற்போதைய நாடாளுமன்றம் மக்கள் ஆணையை இழந்துள்ளது. புதிய மக்கள் ஆணையை பெறுவதற்காக மக்கள் எங்களுடன் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தற்போதைய அரசாங்கத்தினுடைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 20ம் திகதி நூகேகொடவில் பொதுக்கூட்டமொன்றையும் எதிர்வரும் 28ம் திகதி சுவிஸ்லாந்தின் ஜெனீவாவில் போராட்டமொன்றையும் நடாத்தவுள்ளோம்.

கோட்டா கோ கம போராட்டம் இடம்பெற்ற சமயங்களில் பட்டபகலிலேயே பாரதூரமான வன்முறையை கட்டவிழ்த்து விடப்படும்போது, வடக்கு கிழக்கில் கடந்த 30 வருட போராட்டத்தில் எவ்வாறான வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருப்பார்கள் என்பதே தற்போது தென்னிலங்கையில் பேச்சாக இருக்கின்றது – என்றார்.

இவ் ஊடக சந்திப்பில் மக்கள் விடுதலை முன்ணணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரனும் கலந்துகொண்டார்.

#SriLankaNews

Exit mobile version