கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரகம் கொலனி பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக நபரொருவர் தனது வீட்டிற்குப் பெற்றோல் ஊற்றித் தீ வைத்ததில், அவரும் அவரது 13 வயது மகளும் உயிரிழந்த சோக சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இன்று (06) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற இந்தத் தீ வைப்புச் சம்பவத்தில் தீயை வைத்த 43 வயதுடைய தந்தை மற்றும் அவரது 13 வயதுடைய மகள் ஆகியோர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தீக்காயங்களுக்கு உள்ளான 36 வயதுடைய மனைவி, 15 வயதுடைய மகள், 66 வயதுடைய பாட்டி மற்றும் அவர்களைக் காப்பாற்றச் சென்ற 20 வயதுடைய மகன் ஆகியோர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ வைத்த நபர் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியைத் தாக்கி வந்துள்ளார். இது தொடர்பாகக் கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தந்தை தீ வைக்கும் போது வீட்டில் இல்லாத 20 வயதுடைய மகன், சம்பவம் அறிந்து விரைந்து வந்து தனது தாய் மற்றும் சகோதரிகளைக் காப்பாற்ற முயன்ற போதே தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
தொடர்ச்சியான குடும்பத் தகராறு மற்றும் மதுப் பழக்கமே இந்தத் துயரச் சம்பவத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.