வீடு புகுந்து மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார் – உரும்பிராயில் சம்பவம்!!

IMG 20220221 WA0045

உரும்பிராயில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் நேற்று இரவு 11.30 புகுந்த திருடர்கள் பல லட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற நிலையில் சுமார் 12 மணித்தியாலங்களுக்குள் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணையிலேயே ஒருவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது.

உரும்பிராய் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் நேற்றிரவு 11.30 மணியளவில் புகுந்த இருவர் கேரிஎம் மோட்டார் சைக்கிளின் மின் இணைப்பை துண்டித்து திருடிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதுதொடர்பில் தகவலறிந்த யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், சம்பவ இடத்திலிருந்த சிசிரிவி பதிவின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

உடுவிலைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் கோண்டாவிலில் உள்ள காணி ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் தலைமறைவாகி உள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற திருட்டு, கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நிலையில் தேடப்பட்டு வந்தவர் என்றும் பொலிஸார் கூறினர்.

#SrilankaNews

 

 

Exit mobile version