இணைய வழியில் மோசடி – பெருந்தொகை பணத்தை இழந்த யாழ் இளைஞன்..!
மோசடி! போலியான இணைய விளம்பரத்தை நம்பி இளைஞன் ஒருவர் பணத்தை இழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.
இலங்கையில் செயற்படும் பொருட்களை இணையத்தில் விற்பனை செய்யும் விளம்பர இணையத்தளம் ஒன்றில் உந்துருளி ஒன்று விற்பனைக்காக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அந்த உந்துருளியின் விலை 125,000 ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதனை அடுத்து அதில் குறிப்பிடப்பட்டு இருந்த தொடர்பு இலக்கத்துடன் குறித்த இளைஞன் தொடர்பு கொண்ட போது , உந்துருளிக்கு உரிய முழு தொகையையும் வங்கி ஊடாக செலுத்தினால் , உந்துருளியை யாழ்ப்பாணம் கொண்டு வந்து கையளிக்கிறோம் என நம்பிக்கை தரும் விதமாக விளம்பரம் செய்தவர் உரையாடியுள்ளார்.
அதை நம்பிய இளைஞன் மொத்த தொகையையும் வங்கியில் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் உந்துருளியின் உரிமையாளரின் தொலைபேசி இலக்கம் செயல் இழந்துள்ளது.
அதனையடுத்து, விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த கொழும்பு விலாசத்தை தேடி சென்ற போது , குறித்த விலாசம் போலியானது என தெரிய வந்துள்ளது. அதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞன் மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
Leave a comment