பாடசாலைக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21 ஆம் திகதி 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நிலையில் பாடசாலைக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் நீண்டகாலமாக பாடசாலை திறக்கப்படாது இருந்தமையால் முன்னாயத்தமாக துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சிறு பிள்ளைகள் பாடசாலை வருவதால் சுகாதார நடைமுறைகளை அவர்களுக்கு காணொலி மூலம் காண்பித்து சமூக இடைவெளி மற்றும் கழிவகற்றல் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும்.
குறிப்பாக மாணவர்கள் பயன்படுத்திய முகக் கவசங்களை அப்புறப்படுத்த வேண்டும்.
மாணவர்கள் உணவருந்தும் இடங்களில் அதிக சமூக இடைவெளிகள் பேணப்பட வேண்டும்.
கிணறுகள் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாதிருப்பதனால் குளோரின் இட்டு தூய்மைப்படுத்த வேண்டும்.
போன்ற விடயங்கள் உள்ளடங்களாக சுகாதார நடைமுறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.