“வவுனியாவில் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும் பேரணிக்கு அனைரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.”
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“புதிய அரசமைப்பை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை சிங்கள – பௌத்த பேரினவாத அரசு முன்னெடுத்து வருகின்றது. இலங்கைக்கான நான்காவது அரசமைப்பும் மிக இறுக்கமான சிங்கள – பௌத்த ஆதிக்கத்தை கொண்ட ஒற்றையாட்சி அரசமைப்பாகவே அமையவுள்ளது.
இந்நிலையில், தமிழ்த் தரப்பின் கடமையானது ஒற்றையாட்சியை முற்றாக நிராகரித்து தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டித் தீர்வை வலியுறுத்துவதாக அமைந்திருக்க வேண்டும்.
அந்தவகையில், வடக்கு, கிழக்கிலுள்ள பொதுசன அமைப்புக்களையும், ஒற்றையாட்சியை நிராகரிக்கும் அரசியல் தரப்புக்களையும் இணைத்து – ஒற்றையாட்சி அரசமைப்பையும் அதன் கீழான 13ஆவது திருத்தத்தையும் முற்றாக நிராகரித்து – இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, வடக்கு – கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசமும் அதன் இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரித்த சமஸ்டி’ அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்குரிய நீதியை வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க வலியுறுத்தியும், அரசியல் கைதிகளினுடைய விடுதலையை வேண்டியும், சிங்கள பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வவுனியா கச்சேரிக்கு அருகாமையிலுள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுத்தூபியிலிருந்து பேரணியாகச் சென்று தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழக மைதானத்தில் (தாண்டிக்குளம் ரயில் நிலையம் முன்பாக) பிரகடனம் இடம்பெறவுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள மேற்படி போராட்டத்துக்கு வலுச்சேர்க்க, அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழ் மக்களை அணிதிரண்டு வருமாறு அழைக்கின்றோம்” – என்றுள்ளது.
#SriLankaNews