மைத்திரியின் மனு ஒத்திவைப்பு

Maithripala Sirisena

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் சந்தேகநபராக பெயரிட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றினால் வௌியிடப்பட்டுள்ள பிடியாணையை வலுவிழக்கச் செய்யக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு விசாரணைகளை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (06) சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டின் பேரில், இந்த மனு மீதான விசாரணையை ஜனவரி 17-ம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையை அனுமதித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு மீதான விசாரணையை பத்து வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அருட்தந்தை சிறில் காமினி மற்றும் தாக்குதலுக்கு ஆளான ஒருவர் தனக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறைப்பாடு செய்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட முறைப்பாட்டில் உள்ள விடயங்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என சுட்டிக்காட்டிய சிறிசேன, அந்த விடயங்களின் அடிப்படையில் சந்தேகநபராக நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் விடுத்த அழைப்பாணை சட்டத்திற்கு முரணானது எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version