நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு 20 ஆவது அரசியல் திருத்தத்தை இல்லாதொழித்து 19ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாட்டின் நெருக்கடி நிலைக்கு புதிய அமைச்சரவை நியமனம் தீர்வு பெற்றுக் கொடுக்கப் போவதில்லையென தெரிவித்த அவர், தமது காலத்தில் கொண்டுவரப்பட்ட 19ஆவது அரசியல் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் 11 கட்சிகளின் எம்பிக்கள் மற்றும் பொதுஜனபெரமுன எம்.பிக்கள் குழுவொன்றும் தற்போது ஒன்றாக எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துள்ளதைக் காணமுடிகின்றது.
பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டியேற்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் புதிய அமைச்சரவையை அமைப்பதன் மூலம் அப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை.
கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்தே பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அரசாங்கத்திலுள்ள அனைவரும் பதவி விலக வேண்டும் என்றும் புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றுமே நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எவ்வாறெனினும் சபையில் நாம் 40 பேரும் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான குழுவாக எதிர்க்கட்சியில் அமரவில்லை. நாம் எதிர்க்கட்சியில் சுயாதீன குழுவாகவே செயற்படுவோம்.
நாளுக்கு நாள் நெருக்கடிகள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் மக்கள் பெரும் ஆத்திரமடைந்துள்ளனர். அமைச்சரவை மாற்றத்தின் ஊடாக இவர்களின் போராட்டத்தை நிறுத்த முடியாதென்பது தெரிகின்றது.
தற்போதைய அரசுகடந்த இரண்டு வருடங்களில் செய்த அனைத்து வேலைத்திட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது.
அதனால் மக்கள் இந்த அரசாங்கத்தை முழுமையாக விலக வேண்டும் என்றே கூறுகின்றனர். அதே நிலைப்பாட்டிலேயே சுதந்திரக் கட்சியும் உள்ளது.
நாட்டுக்கான வேலைத்திட்டங்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்.
20 ஆவது திருத்தத்தை நீக்கி எமது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews