இலங்கையின் சில பகுதிகளில் இருந்து அடையாளம் தெரியாத நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுதுவாவ் கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில், ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணித்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, நீல நிற காற்சட்டை மற்றும் சிவப்பு கோடு வந்த நீல நிற டீ-சர்ட் அணிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் நேற்று (02) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோது, குறித்த சடலத்தை அவதானித்த தொழிலாளர்கள், உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் உயிரிழந்தவர் சுமார் 73 வயது கொண்டவராக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் கல்கிஸ்ஸ கடற்கரைப் பகுதியிலும் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இன்று காலை 4ஆவது சடலம் மட்டக்குளி பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.