இந்நாட்டில் வாழும் சனத்தொகையில் 30 வீதமானோருக்கு மூவேளை உணவையும் முறையாக உண்ணமுடியாத விதத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று அரச பங்காளிக்கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க கூறியவை வருமாறு,
” எமது நாட்டு வெளிவிவகாரக் கொள்கையானது ஒரு திசையை நோக்கி இழுத்துச்செல்லப்படுகின்றது. இது பயங்கரமான நிலைமை ஏற்பட வழிவகுக்கும்.
அதேபோல நாளொன்றுக்கு லட்சம் ரூபாவை செலவளிப்பவர்களுக்கு, இந்நாட்டில் ஒருவேளை உணவைகூட உண்பதற்கு கஷ்டப்படுபவர்களும் வாழ்கின்றனர் என்பது தெரிந்திருக்குமா என தெரியவில்லை. இதுவும் பெரும் பிரச்சினையாகும்.
ஏனெனில் இந்நாட்டில் ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தை மந்த போசனை பிரச்சினையை எதிர்கொள்கின்றது. அத்துடன், 30 வீதமான மக்களுக்கு மூவேளை உணவை முறையாக உண்ண முடியாத நெருக்கடியான பொருளாதார நிலை உருவாகியுள்ளது. இந்நிலைமை குறித்து நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.
எமது ஆட்சிகாலத்தில் இதுவரை நாம் முன்னெடுத்த திட்டங்கள் தொடர்பில் 2022 இல் மீளாய்வு செய்யப்பட வேண்டும். சுய விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டும். அவ்வாறு சுய விமர்சனம் இல்லையேல் முன்னோக்கி செல்ல முடியாது.” – என்றார்.
Leave a comment