வாராந்தம் 3 லட்சம் மருத்துவ ஒட்சிசன் இறக்குமதி!
கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வாராந்தம் 3 லட்சம் லீற்றர் திரவ மருத்துவ ஒட்சிசனை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தீவிர நிலைமையிலுள்ள கொவிட்-19 நோயாளர்களுக்கு திரவ மருத்துவ ஒட்சிசன் வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் லீற்றர் ஒட்சிசனை மாதாந்தம் இறக்குமதி செய்வதற்கு 2021 மே மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது பரவிவரும் திரிபடைந்த வைரஸ் காரணமாக ஒட்சிசன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால், போதுமானளவு ஒட்சிசனை நாட்டில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு இயலுமான வகையில் தற்போது மாதாந்தம் இறக்குமதி செய்யப்படும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் லீற்றர்களுக்குப் பதிலாக வாராந்தம் 3 லட்சம் லீற்றர் ஒட்சிசனை இறக்குமதி செய்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Leave a comment