இலங்கை
பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல்: பேருந்து சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை
பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல்: பேருந்து சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இரண்டு பேருந்து சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கம்பஹா – கொழும்பு மற்றும் கொழும்பு – கண்டிக்கு இடையில் இயங்கும் தனியாருக்கு சொந்தமான பேருந்துகள் என கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விரு சாரதிகளும் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு வீதியில் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியதால் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி கிரில்லவல பிரதேசத்தில் இரண்டு பேருந்துகளையும் பொலிஸார் நிறுத்தி சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரங்களை பொலிஸ் காவலில் எடுத்துக்கொண்டதுடன் சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் அர்ஜுன கொடிகாரவின் பணிப்புரைக்கு அமைய, கடவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் குமார ஹெட்டியாராச்சி தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.