இலங்கை
அநுரகுமாரவுக்குத் தூதுவிட்ட சரத் பொன்சேகா! தனித்து அரசியல் செய்ய தீர்மானம்
அநுரகுமாரவுக்குத் தூதுவிட்ட சரத் பொன்சேகா! தனித்து அரசியல் செய்ய தீர்மானம்
முன்னாள் அமைச்சர், பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் தொலைபேசி வழியாக கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சரத் பொன்சேகா, அக்கட்சியை விட்டும் விலகி, தனித்து ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.
அதன் காரணமாக அவருக்கு இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சக்தியில் இடமளிக்கப்படவில்லை. அத்துடன் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியிலும் சரத் பொன்சேகாவை இணைத்துக் கொள்ள எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.
இதனையடுத்து சரத் பொன்சேகா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு, அரசியல் செயற்பாடுகளை ஒன்றிணைந்து முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
எனினும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தங்களுக்கு ஆதரவளிக்காத எவரையும் பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவோ, தங்களுடன் இணைத்துக் கொள்ளவோ தயாரில்லை என்று அநுர தரப்பு மிக கடுமையான முறையில் சரத் பொன்சேகாவுக்குப் பதிலளித்துள்ளது.
அதனையடுத்து சரத் பொன்சேகாவும் இம்முறை பொதுத் தேர்தலில் ஒதுங்கியிருக்கத் தலைப்பட்டுள்ளார்.
அத்துடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய பதவியொன்றைப் பெற்றுக் கொள்ளல் அல்லது எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான முயற்சிகளில் மீண்டும் ஈடுபட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.