இலங்கைக்கு செல்லும் பிரஜைகளுக்கு விசா கட்டுப்பாடுகள் : அதிருப்தி வெளியிட்டுள்ள பாகிஸ்தான்
இலங்கைக்கு செல்லும் தமது பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள விசா கட்டுப்பாடுகள் குறித்து, பாகிஸ்தான் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச அரங்குகளிலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரிலும் இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் தமது நாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகள் குறித்து, பாகிஸ்தான் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது
விசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைவதற்காக வகைப்படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டதை அடுத்தே,பாகிஸ்தான் இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ரவீந்திர விஜேகுணவர்தன, இதனை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன், பாகிஸ்தானையும் அதே பிரிவில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரம், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஜீஸ், இலங்கையால் பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறை குறித்து தீவிர அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது இந்தியா உட்பட பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது “மாற்றாந்தாய்” செயற்பாடு என்று அவர் விமர்சித்துள்ளார்.
அத்துடன், பாகிஸ்தானிய பிரஜைகளுக்கான தற்போது தடைசெய்யப்பட்டுள்ள விசா நடைமுறைகள், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் வரலாற்று ரீதியாக நெருங்கிய உறவுகளில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.