இலங்கை
தனித்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பாக முக்கிய தரப்புக்கு அழுத்தம்
தனித்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பாக முக்கிய தரப்புக்கு அழுத்தம்
பிரித்தானியாவுக்கு சொந்தமான டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் வசிக்கும் இலங்கையர்களை பிரித்தானியாவுக்கு அழைத்துவர யவெட் கூப்பர் (Yvette Cooper) மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்கு சொந்தமான டியாகோ கார்சியா தீவில் வசிக்கும் இலங்கையர்களில், ஆண்கள் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாவதாகவும் பெண்கள் உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு கனடாவுக்கு செல்வதற்காக படகில் புறப்பட்ட இலங்கையர்கள் சிலர், நடுக்கடலில் சிக்கித் தவிக்க, பிரித்தானிய கடற்படை அவர்களை மீட்டு டியாகோ கார்சியா தீவுக்கு அழைத்து சென்றது.
தற்போது, 3 ஆண்டுகள் கடந்தும் அவர்கள் குறித்த தீவியேயே அடைபட்டுள்ளார்கள். அவர்கள் மிக குறைவான பரப்பளவு கொண்ட ஒரு கூடாரத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த தீவில் அனுபவிக்கும் கஷ்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் அங்கிருந்த 22 பேர் தவறான முடிவெடுத்து தம்மை தாமே மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நடுக்கடலில் தீவில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களான புகலிடக்கோரிக்கையாளர்களை பிரித்தானியாவுக்கு அழைத்துவர, உள்துறைச் செயலரான யவெட் கூப்பருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, அந்தத் தீவில் சிக்கித் தவிக்கும் சிலரையாவது பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ளுமாறு வெளியுறவுச் செயலரான டேவிட் லாம்மிக்கு (David Lammy) தீவின் ஆணையரான போல் கேண்ட்லர் (Paul Candler) என்பவர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.