இலங்கை
ஆளும் கட்சி கூட்டத்தில் மோதல்: அறிக்கை வெளியிடவுள்ளதாக அறிவிப்பு
ஆளும் கட்சி கூட்டத்தில் மோதல்: அறிக்கை வெளியிடவுள்ளதாக அறிவிப்பு
ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தன்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட உறுப்பினர் குணதிலக ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் தம்மிடம் வாக்குமூலம் பதிவு செய்த போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முக்கிய நிர்வாக மையமொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாம் ஏமாற்றமடைவதாகவும், ஜனாதிபதி செயலகத்தின் சிசிடிவி காட்சிகளை அவதானித்தால் இது தொடர்பான சம்பவத்தை தெளிவாக காணமுடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற போது அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாரிடம் இது தொடர்பான சம்பவத்தை பார்த்ததாக கூறவில்லை எனவும் கூறியுள்ளார்.
ஆளும் கட்சி எம்.பி குழுக் கூட்டத்தில் மஹிந்தானந்த அளுத்கம எம்.பி மற்றும் குணதிலக்க ராஜபக்ஷ எம்.பி.க்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்பட்டது.
இந்த தாக்குதலின் பின்னர், குணதிலக்க ராஜபக்ச இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கால் முறிவு காரணமாக நான்கு மணிநேர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என்றும், சினிமாவில் வரும் காட்சியைப் போல கைகளால் தாக்கியதாகவும் குணதிலக்க ராஜபக்க்ச குறிப்பிட்டுள்ளார்.