இலங்கை
காணிகளுக்கான முழு அதிகாரம் கிடைக்கும் போது ஏற்படும் விபரீதம்! சுமந்திரன் எச்சரிக்கை
காணிகளுக்கான முழு அதிகாரம் கிடைக்கும் போது ஏற்படும் விபரீதம்! சுமந்திரன் எச்சரிக்கை
அரசாங்கத்தினால் வழங்கப்படும் காணிக்கான முழு அதிகாரம் மக்களுக்கு கிடைக்கும்போது, அதனை ஈடுவைத்து அதனை இழக்க நேரிடலாம் எனவும், பல்தேசிய கம்பனிகள் வந்து இந்தக் காணிகளை வாங்கக் கூடும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைடையில் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு முழு உரிமையுடைய காணி உறுதிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“நீண்டகாலமாக காணி உரிமை இல்லாமல் இருந்த மக்களுக்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை முன்னெடுத்த ஜனாதிபதிக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் எமது மக்கள் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த காணி உரிமை உங்களுக்கு கொடுக்கும்போது எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி, முழுமையான அதிகாரம் வழங்கப்படுகிறது. இதுவரை இவ்வாறு நிகழவில்லை.
இதில் ஒரு ஆபத்தும் இருக்கிறது. இந்தக் காணிக்கான முழு அதிகாரம் உங்களுக்கு கிடைக்கும்போது, அதனை ஈடுவைத்து அதனை இழக்க நேரிடலாம். அதனை நீங்கள் விற்கக்கூடும். பல்தேசிய கம்பனிகள் வந்து இந்தக் காணிகளை வாங்கக் கூடும். நாட்டுப் பற்றுள்ள, மண் பற்றுள்ள நீங்கள், உங்கள் காணிகளைப் பாதுகாத்துக் கொள்வதில் அவதானமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
இந்தக் காணி உரிமையைப் போன்று அதிகாரப் பகிர்வு குறித்தும் குறிப்பிட வேண்டும். அதிகாரப் பகிர்வு என்று கோரிக்கை நீண்டகாலமாக மக்களின் அரசியல் அபிலாசையாக இருக்கிறது.
1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரம் மாகாண சபைக்கு கொடுக்கப்பட்டது.
அரசியலமைப்பில் இருந்தும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. காணி அதிகாரம் முழுமையாக மாகாண சபைகளின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அரச காணிகளைக் கொடுக்கப் போதும் மாகாண சபைகளில் இருந்து வரும் கோரிக்கைகளுக்கு அமையே வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பொன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், பின்னர் நீதிமன்றத்தின் மற்றுமொரு தீர்ப்பில், கொடுக்கப்பட்ட அதிகாரம் பறித்தெடுக்கப்பட்டு மத்திய அரசாங்கத்திடம் கொடுக்கப்பட்டது.
இன்று ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளார். அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி தொடர்ந்து கூறி வருகிறார்.
அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்னெடுக்கும் முயற்சிகளுக்கும், காணி அதிகாரம் கொடுக்கும் இந்த உறுதி வழங்கும் இந்த முயற்சிக்கும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்றார்.