இலங்கை
சனல்-4 ஆவணப்பட விவகாரம்: ரணில் விக்ரமசிங்கவுக்கு சவால்
சனல்-4 ஆவணப்பட விவகாரம்: ரணில் விக்ரமசிங்கவுக்கு சவால்
இலங்கையில் பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுரேஸ் சலேவுக்கு எதிராக திராணியிருந்தால் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி சவால் விடுத்துள்ளது.
ஜனாதிபதியாக ராஜபக்ச குடும்பத்தினரால் தெரிவு செய்யப்பட்ட ரணில் ராஜபக்ச, தாம் ராஜபக்ச அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக கட்சியின் மகளீர் அணி தலைவி ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் சனல்-4 போன்ற சர்வதேச ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடாது.
குறித்த நிறுவனம் புலனாய்வு ஊடகவியலின் அடிப்படையில் தகவல்களை சேகரித்து அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தியதன் பின்னர் தங்கள் ஆவணப்பதிவுகளை வெளியிடும்.
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் சனல்-4 வெளியிட்ட உண்மைகளை ஏற்கனவே நாம் அறிந்திருக்கிறோம்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறித்த தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கைகளை வெளியிடவில்லை.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களுடன் குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்புகளை கொண்டிருந்ததை இது உறுதிப்படுத்துகிறது.
விசாரணை அறிக்கைகளில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவை வெளிவரவில்லை.
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக நாம் கூறினோம்.
எனினும், யாரும் அதனை ஏற்றுக் கொள்ள தயாரக இருக்கவில்லை. தற்போது, சனல்-4 ஊடகத்தின் ஆவணப்பதிவை கருத்தில் கொண்டு அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகத்துக்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஸ் சலேக்கு சேவை நீடிப்பை வழங்கியது ரணில் ராஜபக்ச. தற்போது, அவருக்கு எதிரான தீர்மானத்தை மேற்கொள்ள ஜனாதிபதிக்கு முடியும்.
சுரேஸ் சலேவுக்கு எதிராக குற்ற விசாரணையை ஆரம்பிக்க ரணில் விக்ரமசிங்கவுக்கு முடியும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனை தவறென நிரூபிக்க ரணில் விக்ரமசிங்கவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.