இலங்கை
நாட்டின் அதியுயர் நீதிமன்றங்களில் அதிகரித்து செல்லும் நீதியரசர்களின் வெற்றிடங்கள்
நாட்டின் அதியுயர் நீதிமன்றங்களில் அதிகரித்து செல்லும் நீதியரசர்களின் வெற்றிடங்கள்
உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களுக்கான வெற்றிடங்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்த நிலையில் நீதிமன்றின் செயல்பாடுகளுக்கு அது பாரிய இடையூறாக மாறியுள்ளது.
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இரண்டு இடங்களும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஐந்து இடங்களும் வெற்றிடங்களாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதியரசர்கள் ஓய்வு பெற்றதை அடுத்தே இந்த இடங்கள் வெற்றிடங்களாகியுள்ளன.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை உயர்நீதிமன்றத்திற்கு நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அரசியலமைப்பு சபைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாகவே வெற்றிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நீதியரசர் கருணாரத்னவை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்குமாறு ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.
இதனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசர்களின் வெற்றிடங்கள் காரணமாக நீதிமன்றத்தின் இரண்டு அமர்வுகள் செயல்படாததால், வழக்குகள் தேங்கி கிடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியார் நாயகம் ஆகியோரே உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு நியமிக்கத் தகுதி பெற்றவர்களாவர்.
இதேவேளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நீதியரசர் விக்கும் களுஆராச்சி ஓய்வுபெறவுள்ள நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மற்றுமொரு வெற்றிடம் அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.