இலங்கை
ஜே.வி.பியை எச்சரித்ததா இந்தியா? சீனாவால் அச்சுறுத்தல்
ஜே.வி.பியை எச்சரித்ததா இந்தியா? சீனாவால் அச்சுறுத்தல்
சீனாவுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடவேண்டாம் என இந்தியா எம்மிடம் கூறவில்லை. அது பற்றி பேச்சு நடத்த நாமும் முற்படவில்லை.
எனினும், பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயங்களுக்கு அனுமதியளிக்கமாட்டோம் என்பதை நாம் கூறினோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட விஜித ஹேரத் கூறியவை வருமாறு,
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடனான சந்திப்பின்போது அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட காரணிகள் பற்றி பேசப்பட்டாலும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
பூகோள அரசியல் போட்டியால் பிராந்திய பாதுகாப்புக்கு சிற்சில அச்சுறுத்தல்கள் உள்ளன.
இது தொடர்பில் அவர் (இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) தரப்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டது.
இதன்போது எமது நாட்டின் இறைமையை பாதுகாத்துக்கொண்டு, பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது என நாம் கூறினோம்.
எமது நாட்டு பொருளாதாரம், பாதுகாப்பை நாம் முதலில் உறுதிப்படுத்த வேண்டும். எமது நாட்டு பாதுகாப்புக்கு பிராந்திய பாதுகாப்பும் மிக முக்கியம்.
இந்த நிலைப்பாட்டில் இருந்தே நாம் செயற்படுவோம்.
சீனாவுடன் கொடுக்கல் – வாங்கலில் ஈடுபடவேண்டாம் என இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.
நாமும் அது பற்றி பேசவில்லை. பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட இடமளியோம் என்ற விடயத்தை கூறினோம் என்றார்.