இலங்கை
மதுவரி உரிமக் கட்டணங்களில் திருத்தம்
மதுவரி உரிமக் கட்டணங்களில் திருத்தம்
வருடாந்த மதுவரி உரிமங்களுக்கு அறவிடப்படும் கட்டணத்தை மீண்டும் திருத்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
மதுவரி கட்டளைச் சட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்ட முன்னைய திருத்தங்களுக்கு மதுவரி உரிமதாரர்கள் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து, மீண்டும் வருடாந்திர மதுவரி உரிமக் கட்டணத்தை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்கள் பெப்ரவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி இரண்டு கோடியே ஐம்பது இலட்சமாக இருந்த வருடாந்த மதுபான உற்பத்தி உரிமக் கட்டணம் 20 இலட்சம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய கட்டண திருத்தத்தின்படி, தொழில்துறையில் நுழைவதற்கு ஒருமுறை வசூலிக்கப்படும் கட்டணம் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.
புதிய திருத்தத்தின் பிரகாரம், மாநகரசபை அதிகார வரம்புகளில் மதுபானங்களை சில்லறை விற்பனை செய்வதற்கான உரிமக் கட்டணம் 15 மில்லியனாக இருந்ததாகவும் புதிய திருத்தத்தின் பிரகாரம் அது 10 இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகரசபை பகுதிகளுக்கு ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சமான ஆண்டு உரிமக் கட்டணம் 8 இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பகுதிகளில் மதுபானங்களை சில்லறை விற்பனை செய்வதற்கான உரிமக் கட்டணம் 10 மில்லியன் ரூபாவில் இருந்து 6 இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை பனை கல் போத்தல் உற்பத்தி செய்வதற்கான அனுமதி பத்திரக் கட்டணம் 05 இலட்சம் ரூபாவாகவும், தேங்காய் கள் போத்தல் உற்பத்தி செய்வதற்கான வருடாந்த 10 மில்லியன் ரூபாய் உரிமக் கட்டணம் 15 இலட்சமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் வினிகர் தொழிற்சாலைக் கட்டணம் 25 இலட்சத்தில் இருந்து 05 இலட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன் ஒரு தடவைக்கான கட்டணம் 25 இலட்சமாக திருத்தப்பட்டுள்ளது.