இலங்கை
போலி மருந்து ஊழல் விவகாரம்: சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறைப்பாடு
போலி மருந்து ஊழல் விவகாரம்: சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறைப்பாடு
வலிப்பு நோய்க்கு எதிரான சோடியம் வோல்ப்ரோயேட் 100 மில்லி கிராம் மாத்திரைகளுக்காக அனுப்பப்பட்ட ஆவணங்களில் “போலி” பதிவு கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் என்.எம்.ஆர்.ஏ என்ற தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகம், குற்றப்புலனாய்வுத் துறையிடம் முறைப்பாட்டை செய்துள்ளது.
இதனையடுத்து உள்ளூர் உற்பத்தியாளரால் தயாரிக்கப்படும் இந்த வலிப்பு நோய் எதிர்ப்பு மருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
குறித்த மாத்திரையின் உள்ளூர் உற்பத்தி நிறுவனமான, நியூஜென் லங்கா ஹெல்த்கேர் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனமும் இது தொடர்பில் தமது முறைப்பாட்டை குற்றப் புலனாய்வுத் துறையிடம் அளித்துள்ளது.
ஏற்கனவே போலியான இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பில் ஏராளமான ஆவணங்கள் என்.ஆர்.எம்.ஏக்கு சரி பார்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இந்தநிலையில் “கொஸ்ட்ரோ – ரெசிஸ்டண்ட் சோடியம் வொல்ப்ரோயேட் மாத்திரை 100 மில்லி கிராமுக்காக நியூஜென் லங்காவிற்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பதிவுச் சான்றிதழில் முரண்பாடுகளைக் கண்டறிந்ததை அடுத்தே புதிய பிரச்சினை வெளியாகியுள்ளது.
சோடியம் வோல்ப்ரோயேட் 200 மில்லி கிராம் மாத்திரைகளுக்கு மட்டுமே நியூஜெனிடம் செல்லுபடியாகும் உரிமம் இருப்பதாக என்.ஆர்.எம்.ஏ கண்டறிந்துள்ளது.
அதேநேரம் 100 மில்லிகிராமுக்கு உரிமம் கோரி தமது நிறுவனம் விண்ணப்பித்திருந்தபோதும், அது இன்னும் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள நியூஜென் நிறுவனம், தம்மால் ஆவணம் எதுவும் அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் எம்.எஸ்.டி என்ற சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப்பிரிவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போலிச் சான்றிதழ், “உண்மையான நகல்” என்று ஒரு சட்டத்தரணி ஒருவரால் சான்றளிக்கப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து என்.ஆர்.எம்.ஏ நிறுவனம் சோடியம் வொல்ப்ரோயேட்டின் அனைத்து வலிமை கொண்ட மாத்திரைகளையும் உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்துள்ளது.
இதற்கு மத்தியில் எம்.எஸ்.டி என்ற சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப்பிரிவு கோப்புகளில் இருந்த போலி ஆவணம் எப்படி அங்கு வந்தது என்பதும் யார் அதனை சமர்ப்பித்தது என்பது இதுவரை தெரியவரவில்லை.