இலங்கை
அதிகரித்த மதுவரி திணைக்களத்தின் வருமானம்

அதிகரித்த மதுவரி திணைக்களத்தின் வருமானம்
இலங்கை மதுவரித் திணைக்களத்தின் மாத வருமானம் 1 பில்லியன் ரூபாய்கள் உயர்வடைந்துள்ளதாக நாடாளுமன்றக் குழுவின் முன்னால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டிருந்த போலி ஸ்டிக்கர்களை சோதனை செய்யும் நடவடிக்கையின் பின்னரே இந்த வருமானம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.
தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு, ஜனாதிபதிக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மதுவரித்திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கம் ஆகியவற்றின் அதிகாரிகள் குழுவின் முன் அழைக்கப்பட்டன.
இந்த சந்திப்பின்போதே மதுவரி திணைக்களத்தின் வருமான அதிகரிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வரிக் கோப்புகளின் எண்ணிக்கை தற்போது 7 இலட்சம் எனவும், எதிர்காலத்தில் இது 10 இலட்சம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.