இலங்கை
ஜனாதிபதியை உடனடியாக சந்திக்கவுள்ள ஐசிசி தலைவர்
இலங்கை கிரிக்கெட் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் தடை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி விசாரணை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் கிரெக் பார்க்லே உடனடியாக இலங்கை வர காத்திருப்பதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக உயர்மட்ட வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் மீதான தடையை நீக்குமாறு சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவருக்கு அனுப்பிய மின்னஞ்சல் செய்திக்கு பதிலளிக்கும் போதே இந்த அறிவித்தல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் செயற்குழுவின் இரு அதிகாரிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக இலங்கை கிரிக்கெட் தடை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய அதிகாரிகள் சற்று நிவாரணம் வழங்க விருப்பம் தெரிவித்திருந்த போதிலும் இரு அதிகாரிகளும் இரண்டு காரணங்களை முன்வைத்து அதனை எதிர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ரக்பி, கால்பந்தாட்டம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் எவ்வாறு செயற்பட்டார் என்பதை அனுபவத்தில் அறிந்த குறித்த இருவருமே, கிரிக்கட் இடைக்கால குழு நியமிக்கப்பட்ட பின்னரும் கலைக்கப்படாமல் இருந்தமையினால் இவர்கள் இருவருமே எதிர்ப்பதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு மேற்கொள்ளப்படும் அரசியல் தலையீடுகள் குறித்து மேலும் ஆய்வு செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.