இலங்கை
சி.வி.விக்னேஸ்வரனின் காணொளி தொடர்பாக சர்ச்சை
சி.வி.விக்னேஸ்வரனின் காணொளி தொடர்பாக சர்ச்சை
முல்லைத்தீவு நீதிபதி பதவி விலக சட்டமா அதிபரே காரணம்நீதிபதியாக இருந்த சரவணராஜா தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடகமொன்றுக்கு தெரிவித்த காணொளி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்த நிலையில் அது தொடர்பாக அவரே தெளிவுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி குறிப்பில், ”நீதிபதி சரவணராஜாவிற்கு மொழிப்பிரச்சனை இருந்திருக்கும் கூறுகின்றார்” சி.வி.விக்னேஸ்வரன் மேற்படி தலையங்கத்துடன் வெளியாகியிருக்கும் காணொளி எம் மக்களிடையே என் மீது ஒரு தவறான கருத்தை ஏற்படுத்தியிருப்பதை நான் அவதானிக்கின்றேன்.
சட்டத்துறை தலைமையதிபதி நீதிபதி சரவணராஜாவை அழைத்து அவரின் தீர்ப்பை மாற்றும்படி கோரியதாக வந்த செய்தியைப் பற்றி என்னிடம் கேட்கப்பட்டது. அது அவ்வாறு நடந்திருக்கமாட்டாது என்ற கருத்தை நான் வெளியிட்டிருந்தமை உண்மையே. அதற்கான காரணத்தை கீழே தருகின்றேன்.
1. தீர்ப்பு எழுதுவதற்கு முன்னர் நீதிபதியை சட்டத்துறை தலைமையதிபதி தம் காரியாலயத்திற்கு அழைத்தார் என்று எங்கும் கூறவில்லை. அப்படி நடந்திருந்தால் அது ஒரு பாரதூரமான குற்றம். அதனைக் கட்டாயமாக நீதிபதி நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்திருப்பார். அப்படியான செய்திகள் ஏதுமில்லை.
2. தீர்ப்பு எழுதியதின் பின்னரே அவரை அவ்வாறு சட்டத்துறைத் தலைமையதிபதி அழைத்ததாக செய்திகள் கூறுகின்றன. அப்படியாயின் எழுதிய தீர்ப்பை நீதிபதி ஒருவர் எவ்வாறு மாற்றமுடியும் என்ற கேள்வி எழுகின்றது. தீர்ப்பை அளித்ததன் பின்னர் மாற்றுமாறு கோர சட்டத்துறைத் தலைமையதிபதி அத்தகைய சட்டசூனியம் மிக்கவர் என்று நாம் கருதமுடியாது.
3. எனவே நடந்தது வேறொன்றாக இருந்திருக்க வேண்டும்.
4. இது இவ்வளவிற்கும் நீதிபதி மேற்கண்டவாறு கூறியதாக எமக்கிருக்கும் ஒரேயொரு சான்று ஏதோவொரு பத்திரிகை அல்லது வலைத்தளத்தின் கூற்றே. நீதிபதி அவ்வாறு கூறியதாக எந்தவொரு காணொளியும் எனக்குத் தெரிந்தவரை இல்லை.
5. பின் என்ன நடந்திருக்கக் கூடும் ? நீதிபதியின் தீர்ப்பிற்கு எதிராக நான்கு மேன்முறையீடுகள் இப்பொழுது இருக்கின்றன. அந்த வழக்குகளில் நீதிபதி சரவணராஜா பிரதிவாதி என்பதில் சந்தேகம் இருக்கமுடியாது. நீதிபதி ஒருவருக்கு வழக்கமாக சட்டத்துறை தலைமையதிபதியே மன்றில் முன்னிலையானார்.
அப்பொழுது நீதிபதி சட்டத்துறைத் தலைமையதிபதியின் கட்சிக்காரர் ஆகிவிடுவார். சட்டப்படி ஜனாதிபதி ஒரு கட்சிக்காரராக வரும் சந்தர்ப்பத்தில் அல்லாது சட்டத்துறைத் தலைமையதிபதி கட்சிக்காரரை தேடிப்போக வேண்டிய அவசியமில்லை. கட்சிக்காரர் சட்டத்துறைத் தலைமையதிபதியை நாடி வரவேண்டும்.
சிரேஷ்ட சட்டத்தரணிகள் கூட கட்சிக்காரர் எவ்வளவு உயர்பதவி வகித்தாலும் அவர்கள் தமது தனியறையில் வந்து தம்மைச் சந்திக்கவேண்டும் என்றே எதிர்பார்ப்பார்கள். சிறிமாவோ பண்டார நாயக்க பிரதம மந்திரியாக இருந்தபோது ஒரு வழக்கில் தியாகலிங்கம் கியூ.சீ சேவையை நாடினார். தன்னை வந்து சந்திக்கும்படி சிறிமாவோ தியாகலிங்கத்திடம் வேண்டினார்.
தியாகலிங்கம் “மன்னிக்க வேண்டும்! கட்சிக்காரராகிய நீங்கள் என்னை வந்து சந்திப்பதே முறை” என்று கூறி சிறிமாவோவை போய்ப் பார்க்க மறுத்துவிட்டார். பின்னர் சிறிமாவோ தியாகலிங்கத்தின் வீடுதேடிச் சென்று அவரைச் சந்தித்தார்.
எனவே நீதிபதி அவர்கள் சட்டத்துறைத் தலைமையதிபதியை சந்திக்கவேண்டிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தால் அது அந்த நான்கு மேன்முறையீடுகளிலும் நீதிபதி அவர்கள் சட்டத்துறைத் தலைமையதிபதியின் கட்சிக்காரர் என்ற முறையில் தான் அவ்வாறு சென்றிருக்க முடியும் என்று யூகிக்க இடமிருக்கின்றது.
6. சென்ற அவரிடம் மன்றிலே கொடுத்து மேன்முறையீட்டிற்கு இலக்காகிய அவரின் தீர்ப்பை மாற்றுமாறு எந்த விதத்தில் சட்டத்துறைத் தலைமையதிபதி கூறியிருக்கமுடியும்? ஒரு சாதாரண குடிமகன் கூட அவ்வாறு கோரியிருக்க மாட்டான். ஆகவே நடந்தது என்னவாக இருந்திருக்கக்கூடும் என்று யோசித்தேன்.
ஒருவேளை சட்டத்துறைத் தலைமையதிபதி “You could have avoided writing a judgment of this nature”என்று சாதாரணமாக கூறியதை “You should have avoided writing a judgment of this nature” என்று நீதிபதி அவர்கள் பொருள்கொண்டிருக்கலாம் என்று நினைத்தேன். அதனால்தான் மொழிப்பிரச்சனை காரணமாக இருந்திருக்குமோ என்று சிந்தித்தேன்.
7. எதுவாக இருந்தாலும் இவையாவும் எமது யூகமே! நீதிபதியின் நேரிடை செவ்வியின் பின்னரே உண்மை தெரியவரும். ஆனால் அவரிற்கு அச்சுறுத்தல் பிறரால் கொடுக்கப்பட்டது என்பது உண்மையே. அது கண்டிக்கப்பட வேண்டும். குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இன்றைய மனித சங்கிலிப் போராட்டத்தில் அதையே வலியுறுத்தினோம். கடைசியாக நான் மொழிபற்றி கூறியதை ரணிலுக்கு நான் வக்காலத்து வாங்குவதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ரணிலின் கைப்பொம்மை போல் நான் நடப்பதாக கூறப்பட்டுள்ளமை விந்தையாக இருக்கின்றது. நீதிபதி ஒரு வேளை புரிந்து கொண்டிராத காரணத்தால் மேற்படி தன் கூற்றை வெளியிட்டிருக்கலாம் என்று நான் கூறியதற்கும் ரணிலுக்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை.
வெளிநாட்டில் இருந்த ரணில் விடுக்கப்பட்டு மேன்முறையீட்டில் இருந்த ஒரு தீர்ப்பை மாற்றக் கோருமாறு சட்டத்துறை தலைமையதிபதிக்கு ஆணையிட்டதாக கூறவருகின்றார்களா? உண்மையை அறிந்துகொள்வதே ஒரு நீதிபதியின் வேலை. அரசியல்வாதியும் உண்மையைக் காணவே விழையவேண்டும். ஒருவரின் சிந்தனைகளுக்கு வஞ்சகக் காரணங்களை எழுப்பிவிடும் ஊடகத்தினரை எவ்வாறு அழைப்பது? அவர்கள் தான் பதில் தரவேண்டும் என்றுள்ளது.