இலங்கை
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் வரலாற்றுச் சாதனை
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் வரலாற்றுச் சாதனை
முல்லைத்தீவு மாவட்டத்தில் பழமையான பெரிய பாடசாலைகளில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயமும் ஒன்று. இந்த பாடசாலை பல சாதனையாளர்களை உருவாக்கிய பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளது.
விளையாட்டிலும் கல்வியிலும் தொடர்ந்து சாதனைகளை பெற்றுவரும் பாடசாலையின் மாணவர்களின் வரிசையில் தேனுயாவும் இணைந்து கொண்டார்.
பாடசாலையின் வரலாற்றில் முதன் முதலில் பொறியியல் தொழிநுட்ப பாடநெறியில் (e – Tec) 2022 க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்டத்தில் முதல் நிலையை பெற்று ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயதிற்கு பெருமையைச் சேர்த்துள்ளார்.
தொழிநுட்ப பாடநெறியானது பாடசாலைகளில் உயர்தரத்தில் அண்மைக்காலத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பாடநெறியில் அதிகம் ஈடுபாட்டை மாணவர்கள் காட்டி வருவதனையும் அவதானிக்கலாம்.
A, 2C பெறுபேற்றை பெற்ற செல்வி சதாசிவம் தேனுயா (ச.தேனுயா) பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் தன் வீடும் பெருமளவில் தன் வெற்றிக்கான முயற்சியில் தன்னோடு பங்கெடுத்து வந்திருந்தனர் எனக் குறிப்பிட்டார்.
கோவிட் – 19 மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார அரசியல் தளம்பல் தேனுயாவின் உயர்தர கல்வியில் அதிக நெருக்கடியை ஏற்படுத்தி வந்திருந்தமையை அவருடனான கருத்துப் பரிமாற்றத்தின் போது அறிய முடிந்தது.
கோவிட் – 19 இன் போது போக்குவரத்தில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிறைந்த சூழலினால் தொடர்ச்சியான முறையில் தன் கல்வியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் அதிக கடினங்களை எதிர் கொண்டதாக குறிப்பிட்டார்.
மேலதிக கற்றலுக்காக தண்ணீரூற்று முல்லை கல்வி நிலையத்திற்கு சென்றுவரும் தேவை இருந்ததாகவும் குறிப்பிட்டார். பாடசாலையின் ஆசிரியர்களில் பாடத்துறை சார்ந்தோர் அக்கறையுடன் செயற்பட்டதையும் அவை உதவியாக இருந்ததையும் தேனுயாவுடனான உரையாடலில் இருந்தது அறிய முடிந்தது.
தேனுயாவின் அப்பா கூலித்தொழிலாளியாக வருமானத்தை தேடிவந்து சேர்க்கிறார். அம்மா வீட்டில் இருந்து பொறுப்புக்களை சுமந்து வழி நடத்திச் செல்கிறார். இரண்டு அக்காமாரையும் ஒரு தம்பியையும் உடன் பிறந்தவர்களாக கொண்டவர் தேனுயா.
மூத்த அக்கா இருவரும் B – Tec பாடத்துறையில் உயர்தரத்தில் சித்திபெற்று பல்கலைக்கழகத்தில் தங்கள் பட்டப்படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். மூத்த அக்கா மாவட்ட நிலையில் மூன்றாம் நிலையில் சித்திபெற்று தற்போது யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் தன் பட்டப்படிப்பை தொடர்கின்றார்.
இரண்டாவது அக்கா உயர்தர பரீட்சையில் மாவட்ட நிலையில் மூன்றாம் நிலையில் சித்தி பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் தன் பட்டப்படிப்பை தொடர்கின்றார்.
தேனுயாவின் தம்பி 2022 ஆம் ஆண்டில் க.பொ.த.சாதாரணதரத்தில் பரீட்சை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருக்கின்றார். இவர்கள் அனைவரும் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் தங்கள் கல்வியைத் தொடர்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிக திறமைகளை வெளிக்காட்டிவரும் வன்னி மாடசாலைகளின் மாணவர்களில் திறமையானவர்களை வறுமை விட்டதில்லை. அப்பா என்ற தனியொருவரின் வருமான ஈட்டத்தினால் படிப்பு மற்றும் குடும்பச் சூழலின் செலவுகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
மிக கடினமான சூழலில் மேற்கொண்டு வந்த கல்வி முயற்சிகளை கண்ணுற்று உதவ முன்வந்தார்கள் பலருண்டு. நற்குண முன்னேற்ற அமைப்பினர் மாதாந்தம் 4000/= என்ற உதவித் தொகையை தங்கள் வங்கிக்கணக்கிற்கு வரவிடுவதாகவும் அது போல் அக்காக்களின் பல்கலை கற்றலுக்காக சிறிதளவு உதவி கிடைப்பதாகவும் தேனுயா பேசியிருந்தார்.
விளையாட்டில் சிறந்த ஈடுபாட்டைக் காட்டி வரும் தேனுயாவின் தம்பி கைப்பந்து விளையாடில் தேசிய மட்டத்தில் கடந்த இருவருடங்களாக கலந்துகொண்டு வருகின்றார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
தேனுயாவினதும் அவரது சகோதரர்களினதும் கல்வியை சிறப்பாக முன்னெடுப்பதற்காக மேலதிகமான நிதியுதவிகள் தேவைப்படுவதை அறிந்துகொள்ள முடிந்தது.