இலங்கை
முல்லைத்தீவு நீதிபதி : அரச தரப்பு அடுக்கும் குற்றச்சாட்டுக்கள்
முல்லைத்தீவு நீதிபதி : அரச தரப்பு அடுக்கும் குற்றச்சாட்டுக்கள்
முல்லைத்தீவு நீதிபதியின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அபத்தமானவை என்றும் அவர் தற்போது தொழில் நியதிகளுக்கு புறம்பாக செயற்பட்டுள்ளார் எனவும் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ”சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அழைத்து உத்தரவினை மாற்றுமாறு சட்டமா அதிபர் தம்மிடம் கோரியதாக நீதவான் சுமத்தும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.
மேல்முறையீட்டு நீதிமன்றில் ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று மனுக்களில் குறிப்பிட்ட நபர் நபர் பிரதிவாதியாக அவரது அதிகாரப்பூர்வ மற்றும் தனிப்பட்ட ரீதியான அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. இவ்வாறான ஒரு பின்னணியில் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி நீதி சேவைகள் ஆணைக் குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
தமக்கு உதவுமாறும், தம் சார்பில் முன்னிலையாகுமாறும் அவர் அந்த கடிதத்தில் கோரியுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதவான் சார்பில் முன்னிலையாகுமாறு நீதி சேவைகள் ஆணைக்குழு இந்த கடிதத்தின் ஊடாக சட்டமா அதிபரிடம் கோரியுள்ளது.
இவ்வாறான ஒரு பின்னணியில் சட்டமா அதிபர், நீதவானுடன் சில விவரங்களை கலந்துரையாட தீர்மானித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி உரிய அதிகாரிகளின் அனுமதியுடன் இந்த ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட்டது.
எனவே முதலாவதாக சட்டமா அதிபர் அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக நீதவானை, சட்டமா அதிபர் திணைகளத்திற்கு அழைக்கவில்லை.
எனினும் அவர் நீதவான் என்ற அடிப்படையில் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார். சட்டமா அதிபர் திணைக்களத்தின் குழுவிடம் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்காக அவர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.
இந்த சந்திப்பானது சட்டத்தரணி கட்சிக்காரர் என்ற உறவின் அடிப்படையிலான சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தனக்கு நன்றாக தெரிந்த ஒரு விடயம் தொடர்பிலான கூட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று அதன் பின்னர் போலி குற்றச்சாட்டுகளை சுமத்துவது அபத்தமானது.
சந்திப்பின் மெய்யான நோக்கத்தை மூடி மறைத்து திரிபுபடுத்தி பிழையான தகவலை வெளிப்படுத்துவது நியதிகளுக்கும் அல்ல இது அவரின் தொழில்முறைமைக்கும் புறம்பானது.
குறிப்பாக மேலே கூறப்பட்ட இந்த விடயங்களை உண்மையில் இந்த சம்பவத்தின் சரியான பின்னணியாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினையடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே பதவி விலகியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றிற்கு வெளியிலும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தனர் என ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
அண்மையில் தனக்கான பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதாகவும், புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக என்னைக் கண்காணித்துவந்ததாகவும் நீதிபதி ரீ.சரவணராஜா தெரிவித்திருந்தார்.
மேலும், சட்டமா அதிபர், என்னை அவரது அலுவலகத்தில் (21.09.2023)ஆம் திகதி அன்று சந்திக்க வருமாறு அழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் பிரயோகித்தார் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு (முல்லைத்தீவு நீதிபதிக்கு) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் ( Court of Appeal) எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் கோப்பிடப்பட்டுள்ளன.
இவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளேன் என கவலை வெளியிட்டிருந்தார்.
இது குறித்த பதவி விலகல் கடிதத்தினை கடந்த (23-09-2023) அன்று பதிவுத் தபால் ஊடாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளேன் என்றும் ரி. சரவணராஜா கூறியிருந்தார்.