இலங்கை
சஹ்ரான் குழு குறித்து சிக்கிய ஆதாரங்கள்: விடுதலைப் புலிகள் மீது திசை திருப்பிய புலனாய்வு பிரிவு:
சஹ்ரான் குழு குறித்து சிக்கிய ஆதாரங்கள்: விடுதலைப் புலிகள் மீது திசை திருப்பிய புலனாய்வு பிரிவு:
2018 நவம்பர் மாதம் வவுனதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை சஹ்ரான் குழுவே கொலை செய்தது என்பதற்கான ஆதாரம் இருந்த போதிலும், புலனாய்வு குழுவில் ராஜபக்சக்களுக்கு ஆதரவாக செயற்பட்ட தரப்பினர் அந்த கொலை தொடர்பான குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் அமைப்பினர் மீது திசை திருப்பினர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் குற்றவாளிகள் யார் என்பதனை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுடன் அதற்கான சுயாதீன சர்வதேச விசாரணை அவசியமாகும் என்பதனையே நாங்கள் கோருகின்றோம். தேசப்பற்று, மதம், இனம் தொடர்பில் தெரிவித்து ஆட்சிக்கு வந்தவர்கள் தொடர்பிலேயே சந்தேகங்கள் உள்ளன.
இந்நிலையில் சனல் 4 விவகாரத்தில் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் சந்தேகங்கள் ஏற்படுகின்றன. சனல் 4 விவகாரத்தில் அசாத் மௌலானா என்பவர் டி.எம்.வி.பி கட்சியின் உறுப்பினர்.
இது ஸ்ரீ பொதுஜன முன்னணியின் கூட்டு கட்சியாகும். பிள்ளையான் அதில் இருக்கின்றார். அந்தக் கட்சியின் மாகாண சபை வேட்பாளராகவும் இருந்துள்ளார். அத்துடன் பிள்ளையான் முதலமைச்சராக இருந்த போது அவரது செயலாளராகவும் இருந்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் மீது சந்தேகங்கள் ஏற்பட இன்னும் காரணங்கள் உள்ளன. அதன்படி தான் பதவிக்கு வந்ததும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்று கூறினாலும் 3வருடங்கள் கடந்தும் எதுவும் நடக்கவில்லை.
மாறாக சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டார்கள். குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகளான ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் சஹ்ரான் குழுவுக்கும் ராஜபக்சக்களுக்கும் இடையிலான தொடர்பு இவர்களுக்கு இடை தரகர்களாக செயற்பட்டவர்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தினர். இதனால்தான் அவர்களுக்கு இடமாற்றம் செய்தனர். இதில் சந்தேகங்கள் ஏற்படாதா?
2018 நவம்பர் மாதத்தில் வவுனதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொல்லப்பட்டனர். சஹரான் குழுவே கொன்றது என்பதற்கான ஆதாரங்கள் இருந்த போதும் புலனாய்வு குழுவின் ராஜபக்சக்களுக்காக செயற்பட்டவர்கள் அதனை விடுதலைப் புலிகள் மேல் சுமத்தினர்.
அன்று பொலிஸாருக்கு தாக்குதல் நடத்தப்பட்ட ஆயுதத்திலேயே அன்று மாவனெல்லையில் எனது செயலாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சந்தேகங்கள் ஏற்படாதா? அன்று வனாத்தமுல்லையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பிலும் சி.ஐ.டி விசாரணைகள் திசை திருப்பப்பட்டன. இதனால் எங்களின் சந்தேகங்கள் சரியானதே.
இதேவேளை 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி மகிந்தவை பிரதமராக திருட்டுத் தனமாக மைத்திரிபால சிறிசேன நியமித்தார். அதுவே அவர்களின் ‘பிளேன் ஏ’ அது தோல்வியடைந்தது. அதன்பின்னர் மாவனெல்லையில் புத்தர் சிலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்பின்னர் இது தொடர்பில் பாதுகாப்பு சபையை கூட்டுமாறு கூறியும் அதனை செய்யவில்லை. இதனால் விசாரணைகளை மூடி மறைக்க திட்டமிட்டு முயற்சிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகங்களுக்கு காரணங்கள் இருக்கின்றன என குறிப்பிட்டார்.