இலங்கை
சுவீடனில் படிப்பதற்காக காத்திருக்கும் இலங்கை மாணவர்களின் நிலை
சுவீடனில் படிப்பதற்காக காத்திருக்கும் இலங்கை மாணவர்களின் நிலை
சுவீடனில் உயர்கல்வி படிப்பதற்காக சுமார் 510 இலங்கை மாணவர்கள் அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருந்தாலும், நாட்டிற்குள் நுழைவதற்கு இன்னும் ஒப்புதல் பெற முடியாமல் போயுள்ளது.
இதனால் மாணவர்கள் மனவிரக்தியடைந்து நம்பிக்கையற்றவர்களாகவும் மாறியுள்ளனர் என சுவீடன் உயர்கல்வி மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த மாணவர்களில் 30 முதல் 75 இலட்சம் வரை பணம் செலுத்தியவர்கள் உள்ளதாக நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் அரவிந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
“சுவீடன் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெறுவதற்கு சுமார் 980 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 407 பேர் வீசா பெற்றுள்ளனர். ஆனால் எஞ்சியவர்களுக்கு வீசா வழங்கப்படுமா என்பதை அந்த நாடு அறிவிக்கவில்லை.
நாட்டில் சுவீடன் தூதரகம் இல்லாததால், இந்தியாவில் உள்ள டெல்லி தூதரகத்தில் இருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும், பல மாணவர்கள் டெல்லி தூதரகத்திற்குச் சென்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை நல்ல பதில் கிடைக்கவில்லை.
சுவீடன் பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பித்த பல பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையை நிறுத்திவிட்டனர்.
சில பல்கலைக்கழகங்கள் அவர்களின் கோரிக்கைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு காலத்தை நீட்டித்தது. ஆனால் சுவீடனில் குடியேற்ற நிறுவனம் ஒப்புதல் அளிக்காததால் உயர்கல்வி அனுமதிகளை இழந்துவிட்டனர்.
அத்துடன் சில மாணவர்கள் செலுத்திய பணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.