இலங்கை
புலம்பெயர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை: இலங்கை புதிய திட்டம்
புலம்பெயர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை: இலங்கை புதிய திட்டம்
இலங்கையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காண்பதற்கு இலங்கை அரசாங்கம் புலம்பெயர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு பிரச்சனைகளை சர்வதேச சமூகத்திடம் கொண்டு செல்ல முயற்சிக்காது இலங்கையர்களாக அனைவரும் ஒன்றிணைந்து தீர்வு காண முயற்சிக்க வேண்டுமென கொழும்பில் இன்று(07.09.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது விஜேயதாச ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கைகளை வெளியிடும் போது, அது சம்பந்தப்பட்ட வேறு சில தரப்பினரின் நிகழ்ச்சி நிரல்களும் இலங்கையில் செயல்படுத்தப்படும்.
இலங்கைக்கு எதிராக பல சக்திகள் தற்போதும் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றன. கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை அரசாங்கம் நிறைவுக்கு கொண்டு வந்திருந்தது.
இதனையடுத்து, புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கைக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்தது. இது தொடர்பில் இரு தரப்பினரது பக்கமிருந்தும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
இந்த பிரச்சினைகள் நாளாந்தம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றை கருத்தில் கொண்டு நாம் புலம்பெயர் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.
இதனை தொடர்ந்து, மக்கள் மத்தியில் சமாதானத்தை கட்டியெழுப்பி தற்போதுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளோம்.
இது தொடர்பான பல திட்டங்களையும் நாம் செயல்படுத்தியுள்ளோம். காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், நல்லிணக்கம் மற்றும் சமாதானம் தொடர்பான அலுவலகம் உள்ளிட்ட பல திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம்.
இலங்கையில் உள்ள மக்களாகிய எமக்கிடையில் பிரிவுகள் ஏற்பட்டால் அதனை சர்வதேச சமூகம் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.
எமக்கிடையில் ஒற்றுமையிருந்தால் சர்வதேச நாடுகளும் அமைப்புக்களும் இலங்கையின் விடயங்களில் தலையிடாது.” என தெரிவித்துள்ளார்.