இலங்கை

நாட்டை விட்டு தப்பியோடிய யாழ்ப்பாணத்தவர் மும்பை விமான நிலையத்தில் கைது

Published

on

நாட்டை விட்டு தப்பியோடிய யாழ்ப்பாணத்தவர் மும்பை விமான நிலையத்தில் கைது

யாழில் நீதிமன்ற உத்தரவின் பேரில் விதிக்கப்பட்ட பயணத் தடையையும் மீறி நாட்டை விட்டு தப்பியோடிய சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு மும்பையில் தரையிறங்கிய பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 45 வயதுடைய அவரை, நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதவான்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவர் புறப்படும் முனையத்தின் ஊடாக பதுங்கியிருந்து மும்பை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறியுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு வரிசையில் அனுமதிக்காக காத்திருந்த அவுஸ்திரேலிய பெண் ஒருவர், அந்த வழியாக பயணி ஒருவர் தந்தேகத்துக்கிடமான முறையில் செல்வதை அவதானித்தே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அதிகாரிகள் தேடுதல் மேற்கொண்ட போது அவரை கண்டறிய முடியவில்லை. பின்னர், சிசிரிவி பதிவுகளில் இருந்து பயணியை அடையாளம் கண்டு, அவரது கடவுச்சீட்டு மற்றும் விமான சீட்டு அனுமதி போன்ற கணினி மயமாக்கப்பட்ட விவரங்களை ஆய்வு செய்துள்ளனர்.

இதன்போதே அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பயணத் தடை விதிக்கப்பட்ட நபர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விமானம் ஏற்கனவே இந்திய வான்வெளிக்குள் நுழைந்ததால், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் குறிப்பிட்ட பயணி குறித்து மும்பை விமான நிலையத்தின் செயல்பாட்டு மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்தே அவர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version