இலங்கை
தமிழர்களின் தலைகளை களனிக்கு கொண்டு வருவேன்: மேர்வின் சில்வாவின் கருத்துக்கு கண்டனம்
தமிழர்களின் தலைகளை களனிக்கு கொண்டு வருவேன்: மேர்வின் சில்வாவின் கருத்துக்கு கண்டனம்
தமிழர்களின் தலைகளை களனிக்கு கொண்டு வருவேன் என பகிரங்கமாக கூறும் அரசியலாளர்களை கைது செய்ய வேண்டும் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் அமைப்பாளர் அகத்தியர் அடிகளார் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் இன்றையதினம்(14.08.2023) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று எம் தாயகமான வட-கிழக்கின் அனைத்து பிரதேசங்களிலும் மிக வேகமாக தினம் தினம் மரபுரிமை ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்று வருகின்றது. இதனை எதிர்கொள்ள சரியான பொறிமுறை ஒன்று அனைத்து தமிழ் தரப்புக்களும் இணைந்து மேற்கொள்வது அவசியமானது.
இதில் பல்கலைக்கழக சமூகத்தினது பங்களிப்பு புலமைசார் தளத்தில் அத்தியாவசியமானது.
அதே போன்று சட்டரீதியாக பிரச்சனைகளை எதிர்கொள்ள சட்டவாளர்களின் பங்களிப்பு இப்போது போன்று தொடர்ந்து கிடைப்பதுடன் அது அனைத்து பிராந்திய மட்டத்திலும் ஒருங்கிணைத்த நிபுணத்துவத்துடன் இருப்பது மேலும் பலம் சேர்க்கும்.
தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் பல்கலை உள்ளிட்ட உயர் கல்வி மாணவர்கள் மேலும் வீச்சாக போராட்டங்களை மக்கள் சார்ந்தாக ஒழுங்கமைக்க வேண்டும்.
அரசியலாளர்கள் தொடர் அழுத்தத்தை அரசுக்கு வழங்குவதுடன் பாராளுமன்றை புறக்கணித்தல் உட்பட ஒத்துழையாமை இயக்கத்திற்கு தயாராக வேண்டும்.
பன்னாட்டு மற்றும் இந்திய அரசின் கவனத்தை மேலும் ஈர்த்து இந்த பாரிய பௌத்த மேலாண்மையை திணிக்கும் பூர்வீக தமிழர்களின் சிவ வழிபாட்டு இடங்களை மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க அனைத்து தரப்பினரும் ஒட்டுமொத்தமாக எம்முள் இருக்கும் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து முன்வருவோம்.
அமைப்புசார் நிலையில் இயங்கும் நாம் அனைவரும் எம் அமைப்புக்ளின் தனித்துவங்களை பேணும் அதே நேரம் எம் மக்களின் ஒட்டுமொத்த நலனுக்காக இருப்பை இத்தீவில் நிலைநிறுத்தவதற்காக ஒருங்கிணைந்த கட்டமைப்பாக செயற்பட இந்த தீர்க்கமான தருணத்தில் அழைப்பு விடுகின்றோம்.
அதே நேரம் இந்த பிரச்சினையை இதயசுத்தியோடு அணுகி அரசு தீர்க்க தவறின் இந்த தீவில் இனங்களிற்கிடையே சமாதான சகவாழ்வு தொடர்ந்து கேள்விகுறியாகி நாட்டின் எதிர்காலம் அதலபாதாளத்திற்கு செல்லும் என்பதை சுட்டிகாட்டுகின்றோம்.
தமிழர்களின் தலைகளை களனிக்கு கொண்டு வருவேன் என பகிரங்கமாக கூறும் அளவிற்கு வந்துள்ள அரசியலாளர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதும் தமிழரின் வழிபாட்டுத்தலங்கள் தொடர்பாக மிக மோசமான கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு உடனடியாக முன்வர வேண்டும்.
இவற்றை செய்ய தவறின் தமிழர் நாம் தொடர் சாத்வீக போராட்டங்களிற்கும் ஒத்துழையாமை இயக்க முன்னெடுப்புகளிற்கும் தள்ளப்படுவோம் என இந்த சந்தரப்பத்தில் அரசிற்கு ஆழமாக வலியுறுத்துகின்றோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: தேவை ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்துங்கள் - tamilnaadi.com
Pingback: பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு - tamilnaadi.com