கொழும்பை மாற்ற சிங்கப்பூர் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
கொழும்பை மாற்றியமைத்து புதிய தோற்றத்தை ஏற்படுத்த சிங்கப்பூர் நிறுவனத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிங்கப்பூர் நிறுவனமான சுர்பானா ஜூரோங் வழங்கிய திட்டங்களுடன், கொழும்பை அழகிய நகரமாக மாற்றும் தொலைநோக்குப் பார்வை ஏற்கனவே இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் கூறியுள்ளார்.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, சுர்பானா ஜூரோங் குழுமம் ஒரு உலகளாவிய நகர்ப்புற, உள்கட்டமைப்பு மற்றும் நிர்வகிக்கப்பட்ட சேவைகள் ஆலோசனை நிறுவனமாகும், இது வெற்றிகரமான திட்ட செயற்பாட்டில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் சாதனை படைத்துள்ளது.
சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு, சுர்பனா ஜூரோங் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் 120க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் 16,000 உலகளாவிய திறமையாளர் குழுவைக் கொண்டுள்ளன.
40க்கும் மேற்பட்ட நாடுகளின் சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் முற்போக்கான சிந்தனை மற்றும் ஆக்கப்பூர்வமான யோசனைகளால் இயக்கப்படும் கட்டிடக் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், திட்டமிடுபவர்கள், பொறியாளர்கள் மற்றும் பிற நிபுணர்கள் இதில் அடங்குவர்.
இந்தநிலையில், கொழும்பைத் தவிர, வெருகல் ஆறு முதல் மட்டக்களப்பு மற்றும் அறுகம் வளைகுடா பகுதிகள் வரையிலான சுற்றுலா வலயத்தை உருவாக்குவதில் சுர்பனா ஜூரோங் தீவிரமாக ஈடுபட்டு, சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதாக ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2.5 மில்லியனில் இருந்து 5 மில்லியனாகவும், 7.5 மில்லியனாகவும் அதிகரிக்கும் இலக்குடன், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Leave a comment