யாழில் சிங்க கொடியை உயர்த்தி பொன்சோகாவுடன் சம்பந்தன் கூறிய விடயம்!
இந்த நாட்டு இளைஞர்கள் இரத்தம் சிந்தும் யுத்தமொன்றையா மீண்டும் கேட்கின்றீர்கள் என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (20.07.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அதிகாரப் பகிர்வு குறித்து நான்கு கட்ட பேச்சுக்களை ரணில் விக்ரமசிங்க நடத்தியுள்ளார்.
இதனை நான் சிங்களத்தில் கூறியாக வேண்டும். இந்த அதிகார பகிர்வு பேச்சுக்களில் பங்கேற்ற தமிழ் தேசியவாதிகள் வெளியே சென்று கூறுகின்றனர் இது தேவையற்றது.
சமஷ்டியை அடையாமல் இதனை முடிக்க மாட்டோம் என கூறுகின்றனர். நான் அவர்களுக்கு கூறுகின்றேன் கனவு காண வேண்டாம்.
சமஷ்டியில் இருந்து வட்டுக்கோட்டை வரை சென்று மீண்டும் திரும்பி 2009ஆம் ஆண்டு வரை இந்த நாட்டு இளைஞர்கள் இரத்தம் சிந்திய, யுத்தமொன்றையா மீண்டும் கேட்கின்றீர்கள்?
அவ்வாறெனின் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இரா.சம்பந்தனும் அந்த சந்திப்பில் இருந்தார். அவர் சரத் பொன்சோகாவுடன் சிங்க கொடியை உயர்த்தி யாழ்ப்பாணத்தில் என்ன கூறினார்? ஒற்றையாட்சிக்குள் பௌத்த சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்கின்ற அரசியல் தீர்வுக்கு செல்வோம் என குறிப்பிட்டார்.
அவ்வாறெனில் இன்று வந்து பேச்சு நடந்துகொண்டிருக்கும் போது அவர் எவ்வாறு இவ்வாறு கூறுவார். பேச்சுக்களின் போது குறைந்த பட்ச தகுதி என்ன? பேச்சு தொடர்பான ஒழுக்கம். அந்த ஒழுக்கத்தை மீறி, வெளியே சென்று ஊடகங்களுக்கு சமஷ்டியை பெறாமல் நாம் முடிவுறுத்த மாட்டோம் என கூறுகின்றார்.
Leave a comment