ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் உடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பிரான்சில் புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்துக்கான உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி அங்கு சென்றுள்ள நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதேவேளை, ஏற்கனவே கடுமையான நிதி அழுத்தத்தில் உள்ள ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் பெரும் பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால், அமெரிக்க-சீனா பதட்டங்களை நிவர்த்தி செய்வதை வல்லரசுகள் இலக்காகக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
அத்துடன், பிரான்சின் பரிஸில்(Paris) நடைபெற்ற புதிய உலகளாவிய நிதியளிப்பு உடன்படிக்கைக்கான சர்வதேச உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கடனை உடனடியாக மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளளார்.
அதிகாரத்துவம் மற்றும் பிற புவிசார் அரசியல் பிரச்சினைகள் கடன் நிவாரணத்தை தாமதப்படுத்துகின்றன என்று கூறிய ஜனாதிபதி, கடன் வாங்குபவர்களுக்கும் கடன் மறுசீரமைப்பிற்கு நியமிக்கப்பட்ட குழுக்களுக்கும் இடையிலான தொடர்பு மற்றும் பரிஸ் கிளப்(Paris club) மற்றும் பாரிஸ் கிளப்(Paris club) அல்லாத உறுப்பினர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக்கான புதிய அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையில் முன்னேற்றங்கள் தேவை என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அவநம்பிக்கை போக்கு மற்றும் அதிகரித்து வரும் பதற்றம் என்பன ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே பரிஸ் சமூகத்தின் முக்கிய சக்திகள் அவசரமாக தீர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு இலங்கைக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதன் மூலம் நெருக்கடியைத் தூண்டுவதில் இந்தியா ஆற்றிய முக்கிய பங்கை மீண்டும் ஒருமுறை எடுத்துரைத்தார்.
வெளிநாட்டு நிதிகள் மூடப்பட்டிருந்த வேளையில் இந்தியா இலங்கைக்கு உதவி வழங்கியதாக ஜனாதிபதி தெரிவித்தார். கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் ஜப்பான் ஆற்றிய பங்கை அரச தலைவர் ஒப்புக்கொண்டார்.
மேலும், கடனாளிகளை கையாள்வதற்கு இலங்கைக்கு உதவிய பரிஸ் கிளப்பின் உறுப்பினர் என்ற வகையில், இலங்கையின் சார்பாக ஜப்பான் ஒருங்கிணைக்க முன்வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கணிசமான பொருளாதார சீர்திருத்தங்கள் இருந்தபோதிலும், இலங்கையை முன்னோக்கி நகர்த்துவதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பு தேவை என்று தெரிவித்த ஜனாதிபதி, கடன் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பான விரைவான உடன்படிக்கைக்கு ஆதரவளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தியிருந்தார்.
காலநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய நெருக்கடியைச் சமாளிக்க வடக்கு மற்றும் தெற்கு நாடுகளுக்கு இடையே ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்கும் நோக்கத்துடன், புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தத்திற்கான இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை பிரான்ஸ் நடத்துகிறது.
மேலும், குறித்த மாநாட்டில் பலதரப்பு வளர்ச்சி வங்கி சீர்திருத்தம், கடன் நெருக்கடி, புதுமையான நிதி மற்றும் சர்வதேச வரிவிதிப்பு, சிறப்பு உரிமைகள் (SDRs) மற்றும் நாடுகள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் குறித்து உலகத்தலைவர்கள் மத்தியில் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ், அமெரிக்க நிதி செயலாளர் ஜேனட் யெலன், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பல உலகத் தலைவர்கள் குறித்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
1 Comment