இலங்கை
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் தொடர்பில் ஜனாதிபதியிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் தொடர்பில் ஜனாதிபதியிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்துடன் தொடர்புபட்டதாக அரச கட்டமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் தீர்மானங்கள் தொடர்பிலும் பொதுமக்களுக்கு பொறுப்புக்கூறப்படுவதை உறுதிப்படுத்தக்கூடியவகையில் சுயாதீன விசாரணைக் கட்டமைப்பொன்று நிறுவப்படவேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் பரிந்துரைத்துள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் தொடர்பில் அண்மைய வாரங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் ஆராயவிருப்பதாக இலங்கை மனித உரிமைக்ள ஆணைக்குழு இருவாரங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கடந்தவார இறுதியில் ஆணைக்குழு அதன் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது.
‘இலங்கையின் அரசியலமைப்பானது 12(1) ஆம் சரத்தின் பிரகாரம் சட்டத்தின்கீழ் அனைவருக்கும் சமமான பாதுகாப்பு என்ற அடிப்படை உரிமையை உறுதிசெய்வதுடன் 14(ஐ) சரத்தின்படி சட்டரீதியான எந்தவொரு விவகாரத்திலும் ஈடுபடுவதற்கான சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது’ என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு, இந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தைத் தடுப்பதற்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் தவறியதன் விளைவாக சூழலுக்கும், தேசிய பொருளாதாரத்துக்கும், பாதிக்கப்பட்ட சமூகத்தினரின் வாழ்வாதாரத்துக்கும் ஏற்பட்டுள்ள இழப்பினால் மேற்படி உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக இதுபற்றி முறைப்பாடளித்தவர்கள் கருதுவதாகத் தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் மேமாதம் 19 ஆம் திகதிக்கு முன்னதாக கடல் மாசடைதல் தடுப்புச்சட்டத்தின் 34 ஆம் பிரிவின்கீழ் இதுகுறித்து சிவில் வழக்கொன்றைத் தாக்கல்செய்யும்படி சட்டமா அதிபருக்கு அறிவுறுத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்குப் பரிந்துரைத்துள்ளது. அதேபோன்று இப்பரிந்துரைக்கு அமைவாக இவ்விடயம் தொடர்பில் இலங்கையில் சிவில் வழக்கைத் தாக்கல் செய்வதற்குப் போதுமான பின்னணிக்காரணிகள் இல்லையென சட்டமா அதிபர் கருதும் பட்சத்தில், அதுபற்றித் தமக்கு எழுத்துமூலம் விளக்கமளிக்குமாறும் ஆணைக்குழு கோரியுள்ளது.
மேலும் தமது நிலைப்பாட்டின்படி, குறைந்தபட்சம் இலங்கையிலுள்ள நிறுவனம் மற்றும் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் ஆகிய இரு தனியார் கட்டமைப்புக்களுக்கு எதிராக இந்த சிவில் வழக்கு தாக்கல் செய்யப்படவேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் பரிந்துரையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோன்று இவ்விவகாரம் தொடர்பில் உரிய காலப்பகுதியில் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்படாமை உள்ளடங்கலாக எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்துடன் தொடர்புபட்டதாக அரச கட்டமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் தீர்மானங்கள் தொடர்பிலும் பொதுமக்களுக்கு பொறுப்புக்கூறப்படுவதை உறுதிப்படுத்தக்கூடியவகையில் சுயாதீன விசாரணைக் கட்டமைப்பொன்று நிறுவப்படவேண்டும் என்று ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#srilankaNews
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவிப்பு - tamilnaadi.com
Pingback: வெள்ளை வான் கடத்தல் குறித்து விசாரிக்குமாறு கோரிக்கை - tamilnaadi.com