அரசியல்
குருந்தூர்மலை விவகாரம் – வழக்கு ஒத்திவைப்பு
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும், தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்பினர் எதிர்வரும் 30.03.2023 அன்று நீதிமன்றில் ஆஜராகி தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரணராஜா உத்தரவிட்டுள்ளார்.
குருந்தூர் மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிஹாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர் சார்பில் இன்று (02) நீதிமன்றில் மன்றில் முறையீடு செய்யப்பட்டது.
குறிப்பாக குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தினர் சார்பில், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூகஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் வழக்கிலக்கம் AR/673/18 இன் ஊடாக நகர்த்தல் பத்திரம் தாக்கல்செய்து, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி தொடர்ந்தும் சட்டவிரோமாக பௌத்த விஹாரை கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக முறையீடு செய்யப்பட்டது. இதன்போதே நீதிபதியால் மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குருந்தூர்மலை தொடர்பாக வழக்கிலக்கம் AR/673/18 இல் தொடரப்பட்டுள்ள வழக்கில், 12.06.2022இற்கு முன்னிருந்த நிலையை பேணுமாறும், அதற்குமேல் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதிமன்றம் 19.07.2022அன்று கட்டளை பிறப்பித்திருந்தது.
எனினும், நீதிமன்றம் இவ்வாறு வழங்கிய கட்டளையையும் மீறி குருந்தூர்மலையில் பௌத்த விஹாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக கடந்த 23.02.2023 அன்று குருந்தூர் மலைக்கு, தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலரும் கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த விஜயத்தின்போதே இவ்வாறு நீதிமன்றத்தின் கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் இவ்வாறு நீதிமன்றக்கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெறுவது தொடர்பில் களவிஜயத்தில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடந்த 23.02.2023அன்றையதினமே முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டது.
அதேவேளை அதனைத் தொடர்ந்து இன்று (02) முல்லைத்தீவு நீதிமன்றில் AR/673/18 என்னும் வழக்கிலக்கத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றிலும் நீதமன்றக் கட்டளை மீறப்பட்டு கட்டுமானப்பணிகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் புகைப்பட ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்த நீதிபதி ரி.சரவணராஜா, குருந்தூர்மலையில் நீதிமன்றக்கட்டளையை மீறி பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும், தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் ஆகிய தரப்பினர் இம்மாதம் 30ஆம் திகதி மன்றில் தோன்றி விளக்கமளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login