அரசியல்

உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணையுங்கள்!!

Published

on

உள்ளக சுயநிர்ணய உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டால் வெளியக சுயநிர்ணய தீர்வை நோக்கி பயணிப்பதற்கும் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

“தமிழர்களுக்கு இருள் நாள் பெப்ரவரி நான்கு எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் இடம்பெற்ற எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “பிரித்தானியர்கள் தமிழர்களின் தலையெழுத்தினை சிங்களவர்களிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றதால் தான் இன்று பாரிய நெருக்கடிகளை நாம் சந்தித்துள்ளோம்.

வெறுமனே பேசிக் கொண்டிருக்காமல் எமக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக செயலில் இறங்க வேண்டிய காலம் அண்மித்துள்ளது.

நாட்டில் இருந்த தமிழ் அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகளை இந்த பெரும்பான்மை அரசாங்கமே தனிச் சிங்கள சட்டத்தினைக் கொண்டு வந்து நாட்டை விட்டு வெளியேற்றியது என்பதே உண்மையாகும்.

ஆனால் தற்போது தென்னிலங்கையில் இருந்து பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேறுவது குறித்து குரல் கொடுக்கின்றனர்.

அவர்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் மட்டுமே தற்போது மறுக்கப்பட்ருக்கின்றது. ஆனால் தமிழர்களுக்கு தொடர்ந்தும் பொருளாதார அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டன. மறுக்கப்பட்டும் வருகின்றன.

நாட்டிற்று பெரும் அந்நியச் செலாவணியினைப் பெற்றுத் தரும் மலையக மக்களுக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. நாட்டில் இருந்து அடித்து விரட்டப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்ட போதிலும் இன்றுவரை நாட்டிற்கு மிகப்பாரியளவில் அந்நியச் செலாவணியினை மலையக மக்கள் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

அத்துடன் கிழக்கின் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகள் பல தற்போது பெரும்பான்மையினத்தவர்களுக்கு பறித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

போராட்டத்தின் வடிவங்கள் மாறினாலும் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு அரசியல் ரீதியிலான போராட்டத்தினை தமிழரசுக்கட்சி ஆரம்பித்திருக்கின்றது.

இதற்கு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.

எமக்கான இலக்கினை எப்போதும் மாற்றப்பேவதில்லை. தொடர்ந்தும் எமது இலக்கினை அடைவதற்கான வழிகளில் பயணிப்போம்.

தமிழர்கள் இன்று இழந்துள்ள அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவை எமக்கு உள்ளது.

அதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழரசுக் கட்சி முன்னெடுத்துச் செல்லும் என்பதை நாம் உறுதியுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கான மாற்றும் பாதையில் தமிழரசுக் கட்சி தொடர்ந்து பயணிக்கும்.

வெறுமனே நாம் பேசிக் கொண்டிருக்காமல் இந்த ஆண்டின் இறுதிக்குள் எமக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதனை தெரிவித்து கொள்கின்றோம் – என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version