இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் ஒப்பீட்டளவில் பெண்களை விட ஆண்களுக்கே வைரஸ் தொற்று வீதம் அதிகரித்துள்ளதாகவும், தொற்றாளர்களில் 20 ஆண்களுக்கு ஒரு பெண் என்ற ரீதியில் பதிவாகியுள்ளதாகவும், இளம் வயதினரிடையே இந்த அதிகரிப்பு காணப்படுவதாகவும் இலங்கை பாலியல் சுகாதார மற்றும் எச்.ஐ.வி மருத்துவ நிபுணர் விசேட வைத்தியர் மஞ்சுளா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் .
உலக அளவில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 38.4 மில்லியனாகும். கடந்த ஆண்டில் மாத்திரம் 1.5 மில்லியன் புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் 0.1 சதவீதத்திற்கும் குறைவானதாகவே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் 410 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 429 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வருட இறுதியில் இந்த எண்ணிக்கை 600 ஆக பதிவாகலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும் எச்.ஐ.வி தொற்றாளர்களின் மூலமாக ஏனையோருக்கு வைரஸ் பரவக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது. அத்துடன் நீண்டகால மருத்துவ சிகிச்சைகளை பெற்றாக வேண்டும். மேலும் வெறுமனே உடலுறவு மூலமாக மட்டுமே எச்.ஐ.வி வைரஸ் பரவும் என கருதக்கூடாது. இரத்தம் மூலமாகவும் பரவும். எனவே இரத்ததானம் செய்யும் வேளையிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
தாயிடம் எச்.ஐ.வி தொற்று இருக்குமானால் பிள்ளைகளுக்கு கடத்தப்படும் எனவும் வைத்தியர் தெரிவித்தார். எனினும் இலங்கையை பொறுத்தவரையில் தாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி தொற்று கடத்தப்படாத நாடக இலங்கை காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது – என்றார்.
#SriLankaNews