அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவசியமான உணவு தேவையை மதிப்பீடு செய்து அறிக்கை சமர்பிப்பதற்காக அனைத்து நாட்டு விவசாய அமைச்சர்களின் கூட்டமொன்றை ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோப்-27 மாநாட்டிற்கு தலைமைத்துவம் வகிக்கும் எகிப்து நாட்டின் ஜனாதிபதியிடமும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திடமும் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.
எகிப்து நாட்டின் ஷாம் அல் ஷேக் நகரில் தற்போது நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டின் ஒரு பகுதியாக , “உணவு பாதுகாப்பு” தொடர்பில் நேற்று (07) நடைபெற்ற வட்ட மேசை கலந்துரையாடலில் பங்குபற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலக உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நிலைபேண்தகு கடன் நிவாரணத் திட்டத்தை உடனடியாக உருவாக்குவதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோப்-27 இல் வலியுறுத்தியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் இத்திட்டம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுத்து, அதனை 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல் அரசியல் மற்றும் சமூக கட்டமைப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை நாடுகளால் ஈடுசெய்ய முடியாமல் போகுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கோப் -28 இல் உலக உணவு பாதுகாப்பு தொடர்பான இடைக்கால திட்டமொன்றை அறிமுகம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
#SriLanka #world