அரசியல்

ஐ.நா வரைபு! – பல்கலை மாணவர் ஒன்றியம் கண்டனம்

Published

on

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மைய குழுவினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான வரைபு தீர்மானம் அதிருப்தியை அளிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிருப்தி வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில்,

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது முந்தைய அறிக்கையில் பரிந்துரைத்ததை இந்த வரைவுத் தீர்மானமும் இன்னமும் உள்ளடக்கவில்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதே பரிந்துரையையே அனைத்து முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்களும், ஒன்பது இலங்கைக்கு வருகை தந்த முன்னாள் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் இலங்கை தொடர்பான ஐ.நா நிபுணர்கள் குழுவின் அனைத்து உறுப்பினர்களாலும் முன்வைத்துள்ளனர்.

இந்த மூத்த ஐ.நா அதிகாரிகளின் இந்த கூட்டு பரிந்துரையை முன்னிறுத்தி, நாங்கள் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பாதிக்கப்பட்ட தரப்பினர்கள், தமிழ் அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் ஆகியோர் மைய குழு நாடுகளுக்கு கூட்டாக கடிதம் ஒன்றை எழுதி இருந்தோம். இக்கடிதத்தில் அவர்களின் தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தோம்.

தமிழர்களாகிய நாம் கடந்துவந்த பேரவலத்தின் அனுபவத்தின் அடிப்படையில், இலங்கை ஐ.சி.சி.க்கு பரிந்துரைக்கப்படாவிட்டால், அது தமிழர் பகுதிகளில் நிலைகொண்டிருக்கும் மிகப் பெரிய எண்ணிக்கையிலான சிறிலங்கா இராணுவத்தினரை தமிழர்களுக்கு எதிராக இனவழிப்பை, பாரிய அட்டூழியங்களை எந்தத் தயக்கமும் இன்றி, பொறுப்புக்கூறல் அச்சம் இன்றி தொடர்ச்சியாக மேற்கோள்ள அனுமதி அளிக்கும் என்று நாங்கள் பயப்படுகின்றோம். தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள அதே துருப்புக்களே ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றதுடன், நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவர்கள் என்பதை நினைவூட்டுகின்றோம்.

இலங்கை மீதான ஐ.நா தீர்மான செயல்முறையின் முக்கியமான இந்த தருணத்தில், இத் தீர்மானத்திலாவது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையையும், ஐ.நா.வின் மூத்த அதிகாரிகளின் கோரிக்கையையும் புறக்கணிக்காது சேர்த்துக் கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமை மன்ற உறுப்பினர்களை, குறிப்பாக இந்தியாவை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் – என்றுள்ளது

மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற இந்தியாவின் உதவியை வலியுறுத்தி நிற்கின்றோம்.

இந்தியா ஐநா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய உறுப்பினர் மட்டுமல்லாது, அது நமது சக்திவாய்ந்த முக்கியமான அண்டை நாடாகவும், பிராந்திய வல்லரசாகவும் உள்ளது.

பல தசாப்தங்களாக ஈழ தமிழர் இனப்பிரச்சினையில் இந்தியா தீவிரமான அக்கறை கொண்டுள்ளதுடன், சிறிலங்கா உட்பட உலகில் உள்ள வேறு எந்த நாட்டையும் விட எமது அவல நிலையைப் பற்றிய சிறந்த அறிவையும் புரிதலையும் கொண்டுள்ளது.

தமிழராகிய நாம் துன்பங்களை எதிர்கொள்ளும்போது, முதலில் உதவிக்கு வருவது இந்தியா தான். உதாரணமாக, 1983 இல் தமிழர்கள் சிங்கள காடையர்களால் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டு, தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட போது, இலட்சக்கணக்கான தமிழர்கள் சிறிய படகுகளில் இந்தியாவிற்கே பாதுகாப்புக்காக தப்பிச் சென்றனர். இப்போதும் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகள் வாழ்கின்றனர். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் உணவு, தங்குமிடம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பை தமிழ் அகதிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.

இந்தியா பாதுகாப்பு வழங்கியது மட்டுமல்லாது, பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் இந்தியா, 1983-ல் நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு எங்களின் பிரச்சினையை எடுத்துச் சென்று, தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் நமது அவல நிலையை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றது.

ஐ.நா.வில் எங்களுக்கு மீண்டும் இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது. இது எங்களின் பாதுகாப்புடன் நேரடியாக சம்பந்தப்பட்டது.
சிறிலங்கா ஆயுத படையினரால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்காகவும், நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கு இந்தியாவின் உதவி நமக்குத் தேவை.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவுக்கு உரிமையும் அதிகாரமும் உள்ளது. எமது பிராந்தியத்திலிருந்து தொலைதூரத்திலுள்ள எமது இனப்பிரச்சினை தொடர்பாக சரியான புரிதல் இல்லாத நாடுகளை விட, எமது பிராந்தியத்தின் தலைமை நாடாகிய, நமது அவலநிலையைப் பற்றி அதிக புரிதலையும் பொறுப்பையும் இந்தியா கொண்டுள்ளது.

நமது அண்டை நாடாக, ஐ.நா. மற்றும் பிற சர்வதேச மன்றங்களில் தலைமைப் பாத்திரத்தை வகிக்க இந்தியாவை நாம் வலியுறுத்துகிறோம். உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதில் ஐரோப்பிய நாடுகள் முன்னோடியாக இருப்பது போல், இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தற்போது இலங்கை தொடர்பான வரைபு தீர்மானம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த வரைவுத் தீர்மானத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் பரிந்துரையை உள்ளடக்கியிருக்கவில்லை. மேலும் இந்த பரிந்துரையை அனைத்து முந்தைய ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர்கள் மற்றும் ஒன்பது முன்னாள் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களும் பரிந்துரைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கைக்கு விஜயம் செய்து அறிக்கைகளை எழுதியுள்ளனர் அத்துடன் இவர்கள் இலங்கை தொடர்பான ஐ.நாவின் நிபுணர்கள் ஆவார்.

நாம் யாழ்.பல்கலைக்கழக மாணவர் சங்கம், தமிழ் அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் இணைந்து இலங்கையை ஐசிசிக்கு பரிந்துரைப்பதன் முக்கியத்துவம் குறித்து நாடுகளின் முக்கிய குழுவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளோம். ஆனால் எங்களது கோரிக்கைகள், நமது தொடரும் அவல நிலையைப் பற்றிய புரிந்துணர்வும் அனுபவமும் இல்லாத மைய நாடுகளின் குழுவினால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

எமது கடந்தகால அனுபவத்தின் அடிப்படையில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்படாவிட்டால், தமிழர் தாயகத்தில் பெருமளவில் ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா இராணுவத்தினர் பொறுப்பு கூறல் தொடர்பான அச்சம் இன்றி தமிழர்களுக்கு எதிராக பாரிய அட்டூழியங்களை எந்தத் தயக்கமுமின்றி தொடர்வதற்கு துணிந்துவிடும் என்று நாங்கள் தீவிரமாகக் கவலைப்படுகிறோம். தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இதே இராணுவத்தினரே ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்ததுடன், நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ் இனத்தைச் சேர்ந்த நாம் தமிழர் என்ற காரணத்திற்காகவே பெரும் விலை கொடுத்துள்ளோம். உதாரணமாக, இலங்கை தொடர்பான ஐ.நாவின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி, போரின் இறுதி ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் பிப்ரவரி 2017 இல், தமிழ்ப் பெண்கள் “பாலியல் அடிமைகளாக” அடைக்கப்பட்டு சித்திரவதைபடுத்திய சிறிலங்கா இராணுவ “கற்பழிப்பு முகாம்கள்” பற்றிய விவரங்களை ஐ.நாவிடம் ஒப்படைத்தது. மேலும், 29ம் மேற்பட்ட குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இந்த முக்கியமான நேரத்தில், ஐ.நா மன்றத்தில் உதவுமாறு இந்தியாவை மீண்டும் வலியுறுத்துகிறோம். இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வலியுறுத்தி நிற்கின்றோம் என்றுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version