வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடத்த தயார்!

Vithura Wickramaratne

வடக்கு, கிழக்கில் நிலையான சமாதானத்தை பேணும் வகையில் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடத்த உத்தேசித்துள்ளாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கூடியபோது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் கருத்துகளை முன்வைத்திருந்தார்.

“கடந்த 2015 செப்டெ ம்பரில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் இணக்கத்துடன், 33/1 என்ற தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அதில், சர்வதேச நாடுகளில் நீதிபதிகளால் விசாரிக்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், பின்னர் இலங்கையின் கோரிக்கைக்கு அமைய அது பொதுநலவாய நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளின் நீதிபதிகள் என்றவாறு மாற்றப்பட்டிருந்தது.

இம்முறை வெளிவிவகார அமைச்சருடன் அப்போதைய மற்றும் தற்போதைய நீதியமைச்சராக விஜேதாச ராஜபக்சவும் ஜெனீவா சென்றிருந்தார். அமர்வின்போது அரசாங்கத்தின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளியக பொறிமுறை அரசியலமைப்புக்கு முரணானது என்று குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக 2015 ஆம் ஆண்டு அரசியமைப்புக்கு உட்பட்டிருந்த இந்த விடயம், தற்போது அரசியலமைப்பு முரணானது எப்படி .” என்று சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் கொண்டிருக்கும் அக்கறையை தாமும் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

எனினும், மாறிவந்த அரசாங்கங்கள் காரணமாக இதில் மாற்றங்கள் ஏற்பட்டமை யாவரும் அறிந்ததே.

இந்நிலையில், இந்த பிரச்சினை குறித்து எதிர்வரும் வாரங்களில் வடக்கு, கிழக்கில் நிலையான சமாதானத்தை பேணும் வகையில் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடத்த உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version