“இரண்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ளவே மீண்டும் வந்தேன். அந்த இரு எதிர்பார்ப்புகளும் நிறைவேறின.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“அரசியல் என்பதும் அரச நிர்வாகம் என்பதும் வேறு. அந்தவகையில் அரச நிர்வாகத்தில் இருந்து முழுமையாக விலகுகின்றேன். எனினும், அரசியல் பயணம் தொடரும். கட்சிக்காக என்னை அர்ப்பணிப்பேன்.
நெருக்கடியான சூழ்நிலையில், நிதி அமைச்சு பதவியை ஏற்கவே நான் நாடாளுமன்றம் வந்தேன். எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பது கவலை அல்ல. என்னால் முடிந்தளவு, மக்களுக்கு சேவையாற்றினேன். ஆனால் மக்கள் எதிர்பார்த்த அனைத்தையும் நிறைவேற்ற முடியாமல்போனது.
நபர்கள் மாற்றத்தை அல்ல, சிஸ்டம் சேஜ்ஜைதான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் நபர்கள் மாற்றத்தையே நாம் செய்கின்றோம். எதிர்காலத்திலாவது சிஸ்டம் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
எனக்கு எதிராக பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. சிறையில் அடைக்கப்பட்டேன். வழக்குகளுக்கு முகங்கொடுப்பது பிரதான நோக்கமாக இருந்தது. கடைசி வழக்கில் இருந்தும் விடுதலை பெற்றுள்ளேன்.
அடுத்ததாக என்னால்தான் மஹிந்த ராஜபக்ச தோற்றார் என்றார்கள். எனவே, மஹிந்தவை மீண்டும் பதவிக்கு கொண்டுவர நினைத்தேன். இவ்விரண்டும்தான் எனது எதிர்ப்பார்ப்புகளாக இருந்தன. இவை நிறைவேறின. மாறாக நான் பதவிகளை இலக்கு வைக்கவில்லை.” – என்றார்.
#SriLankaNews