மாங்குளத்தில் சிறுமி வல்லுறவு: இளைஞருக்கு 10 வருடக் கடூழியச் சிறை!

Girl abuse

வவுனியா, மாங்குளம் பிரதேசத்தில் 10 வயது சிறுமியொருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞரொருவருக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு தீர்ப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தாம் இரு தடவைகள் குறித்த இளைஞரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக சிறுமி சாட்சியமளித்துள்ளார்.

சிறுமியின் சாட்சியத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குற்றவாளியான இளைஞருக்கு 10 வருட கால கடூழியச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அதனைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் இரண்டு வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அறிவித்துள்ளார்.

20 ஆயிரம் ரூபா அபராதத்தையும் செலுத்த வேண்டும் எனக் குற்றவாளிக்கு உத்தரவிடப்பட்டதுடன், அதனைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் இரண்டு வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளைஞருக்கே இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

2017 மார்ச் மாதம் பாடசாலைக்கு சென்ற 10 வயதான சிறுமியை குறித்த இளைஞர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்று குற்றஞ்சாட்டி இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

#SriLankaNews

Exit mobile version